‘தலைவி’ படத்தை வெளியிடுவதற்காக முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை, தயாரிப்பு தரப்பிடமிருந்து பெற்றுத் தரக்கோரி, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இவர்களுடன், நாசர், சமுத்திரக்கனி, பாரதி கண்ணன், ராஜ் அர்ஜூன், மதுபாலா, தம்பி ராமையா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கர்மா மீடியா எண்டெர்டெயின்மெண்ட், கோத்திக் எண்டெர்டெயின்மெண்ட், ஸ்பிரிண்ட் ஃபிலிம்ஸ் ஆகியோருடன் இணைந்து வைப்ரி மோஷன் பிக்சர்ஸ் சார்பாக விஷ்ணுவர்தன் இந்தூரி இந்தப் படத்தை தயாரித்திருந்தார். படம் வெளியாவதற்கு முன்பு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியை வசூல் ரீதியாக பெறவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டது.
6 கோடி ரூபாயை முன்பணமாக கொடுத்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம், உலகம் முழுவதும் ‘தலைவி’ படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருந்த நிலையில், படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறாததால், தனது முன்பணத்தை திருப்பித் தருமாறு தயாரிப்பு தரப்புக்கு மின்னஞ்சல் மற்றும் கடிதம் எழுதியிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், கடந்த ஒன்றரை வருடங்களாக பணத்தை திருப்பிக் கேட்டும் தராததால், அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தலைவி’ மட்டுமின்றி கங்கனா ரனாவத்-ன் ‘தாகட்’ படமும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.