ஒரு மணி நேரத்தில் நிறைவேறிய இருதய நோயாளி ஒருவரின் 5 வருட கோரிக்கை!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த அருண் சற்குணம்(43) என்பவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகின்றார். இருதய நோயினால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை சிகிச்சைக்காக சென்ற போது, மருத்துவர்கள் அதிகம் செலவாகும் என தெரிவித்துள்ளார்கள்.  இதனால் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளலாம் என நினைத்து, முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை விண்ணப்பிக்க சென்ற போது அவரிடம் குடும்ப அடையாள அட்டை இல்லை. 

இதனால் பல நாட்களாக சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தார். மேலும் கடந்த 5 வருடங்களாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளார். அவர் திருப்பூர் பகுதியில் பணிபுரிந்து வருவாதால் திருமாந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதற்காக அவரது மனுவினை நிராகரித்துள்ளனர்.

இந்நிலையில், குடும்ப அட்டை கோரியும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை கோரியும் தான் கொண்டு வந்த  கோரிக்கை மனுவோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அலுவலகம் வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் க. கற்பகம், அருண் சற்குணத்திடம் உங்களது கோரிக்கை என்ன என கேட்டறிந்து, அவரது நிலையினை உணர்ந்து, உடனடியாக அவருக்கு குடும்ப அட்டையும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் அருண் சற்குணத்திற்கு புதிய குடும்ப அட்டை மற்றும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அருண் சற்குணம் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 5 ஆண்டுகளாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றேன், எனது கோரிக்கைக்கு ஒரு மணி நேரத்தில் தீர்வு கண்டு, எனக்கு மறு வாழ்வு அளித்துள்ளீர்கள், என் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என நெகிழ்ச்சியுடன்  தெரிவித்தார்.

அப்போது, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே எங்கள் பணி. நியாயமான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உங்களுக்கு மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை செய்து தர மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என கூறி வழியனுப்பி வைத்தார். மேலும், துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மாவட்ட வழங்கல் அலுவலருக்கும், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டிற்கான மாவட்ட அலுவலருக்கும் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.