கோவை: நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரே ஆசிட் வீச்சில் ஈடுபட்டுள்ளார். இதை தடுக்க சென்ற வழக்கறிஞர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் சிவக்குமார் என்ற நபர் மறைத்து வைத்திருந்த ஆசிட் குப்பியை எடுத்து தனது மனைவி கவிதா மீது வீசினார். இதனால் கவிதாவின் உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில் சரியாக அருகில் இருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே சிவக்குமாரை அருகில் இருந்த பிற வழக்கறிஞர்கள் தாக்க முற்பட்டனர். இதற்கிடையே அங்கிருந்த காவலர்கள் சிவக்குமாரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே இது போன்று துணிச்சலுடன் வந்து ஆசிட் வீசிய நபரை ஏதற்காக பாதுகாப்பு கொடுத்து அழைத்து சொல்கிறீர்கள் என போலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு சிவக்குமாரை தாக்க முற்பட்டனர். இருப்பினும் காவல்துறையினர் சிவக்குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதற்காக பாதுகாப்பு வழங்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் பரபரப்பாகியது.

கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். நீதிமன்றத்தில் மனைவியின் அருகே அமர்ந்திருந்த கணவன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து திடீரென் மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார். 

மனைவி கவிதா உடல் முழுவதும் ஆசிட் பரவியதுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கணவர் சிவகுமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் ஆய்வு மேற்கொண்டார். 

தற்போது சிவக்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே ஆசிட் வீச்சு அரங்கேறியுள்ள சம்பவம் வழக்கறிஞர்கள் மத்தியிலும் நீதிமன்ற ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.