டி.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்கை நாம் ஒதுக்கிய போதும் அதனை செயற்படுத்திய சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது

கடந்த தசாப்தங்களில் அரசதுறை வியாபாரத்தில் ஈடுபட்டதால் மகாவலி போன்ற 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டது – டி.எஸ். நினைவுதின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

மறைந்த பிரதமர் மகாமான்ய திரு டி.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையை நாம் ஒதுக்கினாலும் பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

எமது நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணில் அடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுதந்திரச் சதுக்கத்தில் (22) நடைபெற்ற மறைந்த பிரதமர் மகாமான்ய டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

வலுவான மற்றும் சக்திவாய்ந்த இலங்கையொன்றை கட்டியெழுப்ப சேனநாயக்கவின் பாரம்பரியத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் , மகாமான்ய டி. எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கொள்ளுப்பிட்டி, பொல்வத்த ஸ்ரீ தர்மகீர்த்தி ஆராமாதிபதி கலாநிதி வணக்கத்துக்குரிய பண்டாரவளை விமலதர்ம தேரர் இதன் போது விசேட உரை நிகழ்த்தினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

அரச துறை வியாபாரம் மேற்கொண்டதால், கடந்த தசாப்தங்களில் மகாவலி போன்ற சுமார் 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரச துறையானது வர்த்தகத்தில் இருந்து விலகி தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டு சுதந்திர மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுதந்திரப் பொருளாதாரத்தை உருவாக்குவதே டி.எஸ்.சேனாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையாக இருந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தனியார் துறையினரால் வியாபாரம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தவிசாளர், பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ரோஹித போகொல்லாகம, கருணாசேன கொடித்துவக்கு, ருக்மன் சேனாநாயக்க, கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க, ஜக்கிய லக் வனிதா முன்னணி தலைவி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாந்தினி கொங்கஹகே, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.