திருமண்டங்குடியில் 114-வது நாளாக கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருமண்டங்குடி: திருமண்டங்குடியில் 114-வது நாளாகக் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார். சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டத்தின் 114-வது நாளான இன்று மருத்துவக்குடியைச் சேர்ந்த முருகேசன், நாககுடியைச் சேர்ந்த தமிழரசன் ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்றுக் கண்டன முழக்கமிட்டனர்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி மாலை கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.பூர்ணிமா தலைமையில் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள், ஆலை அதிகாரிகள்,டிஎஸ்பி பூரணி மற்றும் வருவாய்த்துறை ஆகியோர் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஆலை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாததால், கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்தது. மேலும், எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து விட்டு விவசாயிகள் அனைவரும் வெளியேறினர்.

இது குறித்து விவசாயி ஆ.சரபோஜி கூறியது: ”கோட்டாட்சியர் தலைமையில் கடந்த 21-ம் மாலையில் நடைபெற்ற கூட்டத்தில் எங்களுடைய அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளாததால், கூட்டத்தை விட்டு வெளியேறினோம். அதன் பிறகு அன்றிரவு 9.30 மணி வரை கூட்டப்பொருளுக்கான நகல் கேட்டுக் காத்திருந்தோம். அவர்கள் மறுநாள் காலை வழங்குகிறோம் எனக்கூறியதால் நேற்று முன் தினம் காலை 11 மணி மணிக்குச் சென்று கேட்டோம். ஆனால் கோட்டாட்சியர் அலுவலர்கள், மாலை 4.30 மணி வரை காத்திருக்க வைத்து வழங்கினர். அதில், விவசாயிகளின் கோரிக்கை அனைத்தையும் பதிவு செய்யாமல், ஆலை நிர்வாகத்தினருடைய பதிவு மட்டும் இருந்ததால், நாங்கள் கையெழுத்திடாமலும், நகலை வாங்காமல் வந்து விட்டோம்.

இது குறித்து கோட்டாட்டாட்சியரிடம் தொலைப் பேசியில் கேட்டபோது, நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள் எனக் கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டார். எனவே, எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.