'விமர்சித்தால் அடக்குமுறையா…' – சவுக்கு சங்கருக்கு சீமான் சப்போர்ட்!

Seeman Against DMK: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத் துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல. 

எளிய மக்களின் விமர்சனங்கள்… 

மாற்றுக் கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்செருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப்.

கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும்” என குறிப்பிட்டுள்ளார். 

சவுக்கு சங்கர் ஆதரவாக சீமான்…

முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரபலமான சவுக்கு சங்கரின், ‘The Voice of Savukku’ என்ற ட்விட்டர் பக்கத்தின் அட்மினாக பிரதீப் பணிப்புரிந்து வருகிறார். இந்த சூழலில் சவுக்கு சங்கரின் அட்மின் வாய்ஸ் ஆஃப் சவுக்கு என்ற ட்விட்டர் பக்கத்தில் கவுண்டமணி, செந்தில் காமெடியை வைத்து வீடியோ மீம் ஒன்று வெளியானது. 

இந்த வீடியோ மீம் தான் சர்ச்சையை கிளப்பியது. இதில், சவுக்கு சங்கர், தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கு நிதியமைச்சரும் பதில் அளித்திருந்தார். தற்போது, திமுகவுக்கு எதிராகவும், சவுக்கு சங்கரின் அட்மீனான பிரதீப்பிற்கு ஆதரவாகவும் சீமான் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடதக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.