அதென்ன தகுதி..? உரிமை தொகை விவகாரம்… சீமான் ஆவேசம்..!

தமிழக சட்டசபையில் கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பரில் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காரணம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என அரசு குண்டு தூக்கி போட்டுள்ளதால் யார் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை சுட்டிக்காட்டி முதல்வரை தரக்குறைவாக சித்தரித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தாக குற்றம் சாட்டி, வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் ட்விட்டர் பக்கத்தின் அட்மினை கைது செய்ய வேண்டும் எனவும், அந்த ட்விட்டர் பக்கத்தை முடக்க கோரியும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் பக்கத்தின் அட்மினான பிரதீப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து பல்வேறு அமைப்பினர் குரல் கொடுத்து வரும் நிலையில்

சீமானும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத்துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல. மாற்றுக்கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் அறிக்கையில், தமிழகத்திலுள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்செருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப். கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.