சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வட்டக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது உறவினரின் மகளை அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்தார் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டிக்கு சென்று விட்டனர் பின்னர் அவர்களை முருகேசன் மற்றும் உறவினர்கள் மீட்டனர் தொடர்ந்து இருவரையும் பிரித்து வைத்து அந்த பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த காதலுக்கு அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன் சசிகுமார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் காதல் ஜோடி பிரிந்த பிறகும் கூட அவர்களுக்கு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு மார்ச் ஏழாம் தேதி முருகேசன் அவர்களின் நண்பர் சின்ன குஞ்சு என்ற கந்தசாமி சங்கர் என்ற முருகன் ஆகிய மூன்று பேரும் பெரியண்ணன், சசிகுமார் ஆகிய இருவரையும் முருகேசனின் தென்னந்தோப்புக்குள் வரவழைத்தனர். அப்போது சந்தன கட்டை கடத்தி செல்லலாம் அதன் மூலம் நிறைய பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்
மேலும் மது அருந்துவதற்காக சசிக்குமாரின் கையில் பணத்தை கொடுத்து மது பாட்டில் வாங்கி வரும்படி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பெரிய அண்ணனை தென்னை மரத்தில் கட்டி வைத்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர் மது பாட்டில் வாங்கி வந்த சசிகுமாரையும் அதேபோல் கொலை செய்தனர். தொடர்ந்து முருகேசனின் டிராக்டரில் இருவரின் உடல்களையும் ஏற்றிக்கொண்டு, ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏழுகுமலை பெருமாள்பாளையம் அருகே வீசி விட்டு வந்தனர். அங்கு துர்நாற்றம் வீசியதின் பேரில் சித்தோடு காவல்துறையினர் அங்கு சென்று இரண்டு அழுகிய சடலங்களை மீட்டனர்.
இறந்து போனவர்கள் அணிந்திருந்த சட்டையின் காலரில் இருந்த டைலரின் பெயரை வைத்து விசாரித்ததில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் பெரியண்ணன் சசிகுமார் என்பதும் அவர்கள் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து முருகேசன், கந்தசாமி, சங்கர் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஓமலூரை சேர்ந்தவர்கள் என்பதால் சித்தோடு காவல்துறையினர் இந்த வழக்கை ஓமலூர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
பின்னர் இந்த வழக்கு சேலம் ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதற்கிடையில் சங்கர் என்கின்ற முருகன் இறந்து போனார். இதையடுத்து இரண்டு பேர் மீது உள்ள வழக்கு நடந்து வந்தது அரசு வழக்கறிஞர் துரைராஜ் இந்த வழக்கில் ஆஜரானார் இன்று நீதிபதி ஜெகநாதன் வழக்கு விசாரித்து முருகேசன், கந்தசாமி ஆக இரண்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் 82,000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இதில் 41 ஆயிரத்தை பெரிய அண்ணனின் மனைவி வளர்மதிக்கு கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார் 26 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.