அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா? அண்ணாமலை -அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க நேற்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி கிளம்பினார்.

தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக பணியாற்றுவேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க பாஜக தயாராகிவிட்டதை இது தெளிவுபடுத்திய நிலையில், தமிழக பாஜக முடிவு தான் இது; தேசிய தலைமையோ அதிமுகவுடனான கூட்டணியை தொடர விரும்புவதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில் நேற்று அண்னாமலை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் வரை நடைபெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விசாரித்தோம். “தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் கருதுகிறார்கள். பெரிய நகரங்கள் முதல் சிறிய ஊர்கள் வரை கட்சியை கொண்டு சென்றுள்ளோம். இந்த சூழலில் நாம் அதிமுக போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்கு அதிமுகவே முழு உரிமை கோரும். கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டுக் கொண்டே இருந்தால் தனித்தன்மையை இழந்து விடுவோம்.

எனவே பாஜக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்ததால் நமது வாக்கு வங்கி உயரும்” என்று அண்ணாமலை அமித் ஷாவிடம் கூறியதாக சொல்கிறார்கள். அதற்கு அமித் ஷா தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல், அதிருப்தி காரணமாக பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவருவது விவாதங்களை கிளப்பிய நிலையில் அது குறித்தும் டெல்லி பயணத்தில் அண்ணாமலை விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.