“ஒரே வரியில் அவனைப் பற்றி கூறிவிட முடியாது" – மகனின் கல்லறையில் QR குறியீட்டை பதித்த தந்தை!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய இளம் மருத்துவர் ஐவின் பிரான்சிஸ்.  இவரின் தந்தை பிரான்சிஸ் ஓமனில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகவும்,  தாய் லீனா ஓமனில் உள்ள இந்தியப் பள்ளியின் முதல்வராகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஐவின் மருத்துவப் படிப்போடு இசை, விளையாட்டுகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மேலும் அவர் தனது நடிப்பால் சமூகத்தில் பிரபலமானவராக விளங்கினார். கடந்த 2021-ல் ஐவின் பேட்மின்டன் விளையாடும் போது சரிந்து விழுந்து துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

இவருடைய பிரிவை தாங்காத குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். கேரள குரியாச்சிராவில் உள்ள செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் இந்த இளைஞரின் கல்லறையை அமைத்தனர்.  

அந்தக் கல்லறையில் வாசகம் பதிக்க குடும்பத்தினரை ஐவின் தந்தை அனுமதிக்கவில்லை. ’என் மகனைப் பற்றி ஒரு வாசகத்தில் சொல்லி விட முடியாது’ என்று தடுத்தார். தந்தையின் மனநிலையை அறிந்த ஐவின் சகோதரி அவரது வாழ்க்கையை வீடியோவாக ஆவணம் செய்து காட்சிப்படுத்தவும், அதை QR குறியீட்டுடன் இணைத்து கல்லறையில் பதிக்கவும் ஆலோசனை வழங்கினார்.

ஐவின் பிரான்சிஸ் கல்லறையில் QR குறியீடு

அவனது நினைவுகளை மறக்க முடியாத தந்தை, இந்த ஆலோசனை சரி என்று தீர்மானித்தார். இளம் வயதில்  மறைந்த தன் மகனின் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஐவின் வாழ்க்கையின் அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கிய இணையப் பக்கத்தை வடிவமைத்து அதை QR குறியீட்டுடன் இணைத்தனர். ஐவின் கல்லறையின் மீது அந்த QR  குறியீட்டை பதித்தனர்.

ஐவின் பிரான்சிஸ்

இது குறித்து தந்தை கூறுகையில், “என் மகனின் கல்லறையில் ஒரு வாசகத்தில் அவனைப் பற்றிக் குறிபிட முடியாது என்பதால் அவனைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக QR கோடு பதித்துள்ளேன். இந்த QR  குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக அவனுடைய நிகழ்ச்சிகளின் வீடியோக்களை அனைவரும் பார்க்கலாம். அவனைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள முடியும்” என்று கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.