கலாஷேத்ராவில் பாலியல் அத்துமீறல்கள்: 100 பெண்களின் அறிக்கை, 641 பேரின் கையெழுத்து – என்ன நடந்தது?

டிசம்பர் 2022ல், கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநரும், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான லீலா சேம்சன், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், கலாஷேத்ராவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்த ஒரு பதிவை எழுதி, உடனே அதை நீக்கினார். அந்தப் பதிவில், கலாஷேத்ராவில் கடந்த பத்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியர், மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 18 வயது நிரம்பாத குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கலாஷேத்ராவின் நிர்வாகிகள் அவசர அவசரமாக ஒரு விசாரணையை மேற்கொண்டு, அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று கூறி விசாரணையை முடித்துவிட்டனர். ஆனால் இப்போது சுமார் மூன்று மாதங்கள் கழித்து, நூறு மாணவிகளின் புகார்களுடன் தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து தமிழ்நாடு டிஜிபிக்கு இந்தக் குற்றச்சாட்டை உடனடியாக விசாரிக்கும்படி அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Leela Samson

மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட அதே ஆசிரியருக்கு, கலாஷேத்ராவின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மரியாதை செலுத்தியதைக் கண்டு மாணவிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அந்த ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட புகார்கள் கலாஷேத்ராவின் பெருமையைச் சீர்குலைக்கும் விதத்தில் பரப்பப்பட்டு வரும் கட்டுக்கதைகள் என்றும், இனி மாணவர்கள் இச்சம்பவம் குறித்துப் பேசவோ, இணையத்தில் கருத்துகள் பகிரவோ கூடாது என்றும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

அதனால், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘கேர்ஸ்பேசஸ்’ எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை ரகசியமாகப் பகிர்ந்துள்ளனர். இது குறித்த முழுமையான விவரங்களை ‘தி ப்ரிண்ட்’ ஆங்கில டிஜிட்டல் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.  

சென்னை, திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா நிறுவனத்தில் உலகின் பல இடங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து தங்கிக் கலை பயின்று வருகின்றனர். பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, கலாஷேத்ரா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய கலைஞர்களை நம் நாட்டிற்கு வழங்கிய பெருமையும் இந்த நிறுவனத்தையே சேரும். அதே சமயம், இங்குப் பல பிரிவினையும், ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதாக மாணவர்கள் ’கேர்ஸ்பேசஸ்’ அமைப்பிடம் பகிர்ந்துள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாக சமூக வலைதளத்தில் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த இந்தப் பிரச்னை, ’கேர்ஸ்பேசஸ்’ எனும் அமைப்பின் பார்வைக்கு வந்தது. கலாஷேத்ரா மாணவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு பாதுகாப்பான தளத்தை கேர்ஸ்பேஸ் அமைப்பு உருவாக்கியது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்பதால், கலாஷேத்ராவில் படிக்கும் மாணவர்கள் உட்பட ஏற்கெனவே படித்து முடித்த முன்னாள் மாணவர்களும், தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான தாக்குதல்கள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து சுமார் நூறு மாணவர்களின் அறிக்கை, 641 பேரின் கையெழுத்துடன், இப்பிரச்னை தேசிய மகளிர் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சமூகத்திலும், நிர்வாகத்திலும் அதிகாரப் பதவியிலிருக்கும் அந்த ஆசிரியர் மீது எந்தத் தவறும் இல்லை என்ற கண்ணோட்டத்திலேயே நிர்வாகம் விசாரணையை மேற்கொண்டதாகவும், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மத்தியில், தாங்கள் பாதுகாப்பாக உணர்வதாக சீனியர் மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்து, கையெழுத்து வாங்கியதாகவும்  கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அதைப் பற்றிப் பேச முயன்ற போது, பொய் புகார்களைப் பரப்ப வேண்டாம் என ஆரம்பத்திலேயே பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒடுக்கியதாக, நிர்வாக இயக்குநர் மீது மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

’கேர்ஸ்பேஸ்’ அமைப்பிடம், ஏன் இன்னும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரின் பெயரை வெளியிடவில்லை என்று கேட்டதற்கு, ”பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் குற்றம்சாட்டப்பட்டவரின் அடையாளத்தையும் வெளியிடவில்லை. மேலும், விசாரணை நடந்துகொண்டிருப்பதால் பெயரை வெளியிட்டால் அதிகாரமுள்ள அந்த ஆசிரியர், எங்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதனால், விசாரணையின் முடிவில் உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்” என்று கூறினர்.

இது குறித்து தேசிய மகளிர் ஆணையம், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் மீதும், பாதிக்கப்பட்டவர்களின் புகாரைச் சரியாக விசாரிக்காத இயக்குநர் மீதும் உடனடியாக வழக்குப் பதிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.