குமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் பேராதரவினை பெற்றவர் ராகுல்காந்தி: KS.அழகிரி

ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.ஆகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2019 ஏப்ரல் 13 ஆம் தேதியன்று மக்களவை தேர்தல் பரப்புரையின் போது கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது பொதுவாக கூறப்பட்ட ஒரு கருத்தின் அடிப்படையில் குஜராத் மாநிலம் சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது. கோலார் பொதுக் கூட்டத்தில் பேசியதற்கு சூரத் நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தொடரப்பட்டது என்று தெரியவில்லை. எந்த குறிப்பிட்ட நபரையும் குறித்து பேசாத நிலையில் அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டது வியப்பாக இருக்கிறது.

மேலும், தொடக்கத்தில் நீதிபதியின் முன்பு புகார் அளித்தவரே பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வழக்கை நடத்த விடாமல் காலம் தாழ்த்தி வந்தார். பிறகு அந்த குறிப்பிட்ட நீதிபதி மாறுதலான பிறகு புதிய நீதிபதி வந்ததும் வழக்கு வேகமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மிகமிக சாதாரண விமர்சனமாக கருதப்பட்ட விஷயத்தில் இத்தகைய அதிகபட்சமான தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் அதே நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. மேல்முறையீடு செய்து தண்டனையை நிறுத்தி வைக்கவும், நீதியை நிலைநாட்டவும் உரிய நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில் சூரத் நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக வைத்து அவசர அவசரமாக ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். சூரத் குற்றவியல் நீதிமன்ற தீர்ப்பின்படி தலைவர் ராகுல்காந்திக்கு அதிகப்படியான இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்த போதே மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்படுகிற சந்தேகம் நிலவியது. அது இப்போது அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மத்தியில் 9 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் நரேந்திர மோடியின் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக இந்திய ஒற்றுமை பயணத்தின் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களின் பேராதரவினை பெற்ற ராகுல்காந்தியின் அரசியல் செயல்பாடுகளை எப்படியாவது முடக்க வேண்டும் என்கிற முயற்சியில் தற்காலிகமாக பதவி பறிப்பினை செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெறுதவதற்கான வாய்ப்பு சட்டத்தின்படி வழங்கப்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தில் சர்வாதிகாரியாக செயல்படும் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல்காந்தி குரல் கொடுத்து வருகிறார். தவறை தவறு என்று கூறுகிற துணிவை அவர் பெற்றிருக்கிறார். இதைக் கண்டு சர்வாதிகாரி மோடி அச்சப்படுகிறார், கோபப்படுகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை என பல்வேறு அமைப்புகளை ஏவிவிட்டு காங்கிரஸ் கட்சியை முடக்குவதற்கு பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அத்தகைய சதித் திட்டங்களில் முதன்மையானது தான் மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பாகும்.

கடந்த ஜனதா ஆட்சிக் காலத்தில் அன்னை இந்திரா காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை பழிவாங்கும் நோக்கோடு பறித்தார்கள். ஆனால், சிக்மகளுர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களவை உறுப்பினராக தேர்வு பெற்று ஜனதா ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டி, 1980 இல் பிரதமராக பொறுப்பேற்று அன்னை இந்திரா காந்தி சாதனை படைத்தார். அதைப் போல தான் இன்றைக்கு மோடி ஆட்சியில் ராகுல்காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை முறியடித்து சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தலைவர் ராகுல்காந்தி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பதவி பறிப்புக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள் விரையில் அறிவிக்க இருக்கிறார். அந்த அறிவிப்பின்படி நடைபெற இருக்கிற போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு அளவில் பங்கேற்க அணி திரண்டு வரும்படி அன்போடு அழைக்கிறேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்பதை நிரூபிக்கிற வகையில் மோடியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.