ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸார் போராட்டம்

சென்னை: மோடி என்ற பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சென்னைவருவதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்தில் காத்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செய்தி அறிந்ததும், அந்த ரயில்நிலையத்தில் தான் செல்ல இருந்த ரயிலை மறித்து தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்க ளிடம் கூறும்போது, ‘‘இந்தியாவில் பேச்சுரிமை, கருத்துரிமை இருக்கிறது. ராகுல் காந்தி ஒரு கூட்டத்தில் பேசினார் என்று காவல்துறை ஒரு குறிப்பை கொடுத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவர் யாரையும் குறிப்பிட்டும், ஒப்பிட்டும் சொல்லவில்லை. 1000 தடைகள் வந்தாலும் ராகுல் காந்தி முன்னேறிச் செல்வார்’’ என்றார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நேற்று பங்கேற்றிருந்த நிலையில், ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைவரும் வெளியில் வந்து, கழுத்தில் கருப்பு பட்டையை அணிந்து கொண்டு, நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து வளாகத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர்செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் சிறைசென்ற குடும்பம் ராகுல் காந்தியின்குடும்பம். அவர் மீது அவதூறு வழக்கு போட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளனர். 20ஆண்டுகள் சிறையில் வைத்தாலும்ராகுல் காந்தியின் குரல் மக்களுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும். உண்மைக்குப் புறம்பான இந்தத் தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலமாக தகர்த்தெறிவோம். ராகுலின் அரசியல் எதிர்காலத்தை முடக்கும் நோக்கில், பாஜக, ஆர்எஸ்எஸ் இவ்வாறு செய்கின்றன. அதை மக்கள் தகர்த்தெறிவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமூர்த்தி பவனில்.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள், மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆ.கோபண்ணா ஆகியோர் தலைமையில், சூரத் நீதிமன்றத் தீர்ப்புக்குஎதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சாலை மறியல் செய்ய முயன்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டதலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டில்லிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று திருச்சி, மதுரை,நெல்லை உள்ளிட்ட அனைத்துமாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல் போராட்டங்களில் காங்கிரஸார் ஈடுபட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.