ராகுல் காந்தி பதவி நீக்கம்; லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் வழக்கு நியாபகம் இருக்கா?

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று
காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. அதேசமயம் எல்லா விஷயங்களும் சட்டத்தின் படியே நடைபெற்று வருவதாக பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தற்போது ராகுல் காந்திக்கு முன்னால் இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன.

இரண்டு ஆண்டுகள் சிறை

மோடி குறித்த அவதூறு பேச்சால் கிடைத்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய சட்டப் போராட்டம் நடத்த வேண்டும். இதில் வெற்றி கிடைத்தால் தண்டனைக்கு தடை வாங்கிவிடலாம். உடனே ராகுல் காந்தியின் எம்.பி பதவி திரும்ப கிடைத்துவிடும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிடலாம். அதற்கான களப் பணியில் தீவிரமாக செயல்படலாம்.

சட்டப் போராட்டம்

நாடாளுமன்றத்திலும் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க முடியும். ஒருவேளை தண்டனையை ஏற்றுக் கொண்டாலோ, சட்டப் போராட்டத்தில் தோல்வியை தழுவினாலோ பெரிய சிக்கலில் போய் முடிந்துவிடும். அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட அளவிற்கு ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை பின்னோக்கி தள்ளிவிட வாய்ப்புள்ளது. எனவே மீண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

லட்சத்தீவு எம்.பி

இந்நிலையில் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு மீண்டு வந்த முகமது பைசலின் விவகாரம் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது அப்போதைய மத்திய அமைச்சர் சயீத் மருமகன் முகமது சலியா என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

10 ஆண்டுகள் தண்டனை

இதையொட்டி முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் விசாரித்து வந்தது. அதில் முகமது பைசல் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

மீண்டு வருவாரா ராகுல்?

இதனால் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முகமது பைசலை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை எடுத்தது. உடனே அவர் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி தண்டனை உத்தரவிற்கு தடை வாங்கினார். அதுமட்டுமின்றி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்ற உத்தரவையும் பெற்றார்.

தற்போது மீண்டும் எம்.பி பதவியுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று வருகிறார். தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து தருவதுடன், குறைகளை போக்கவும் நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு சட்டப் போராட்டம் நடத்தி ராகுல் காந்தி மீண்டு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.