தேர்தல் 2024: ‘புதிய’ 3-வது கூட்டணிக்கு முயலும் மம்தா… அவரின் முயற்சி எடுபடுமா?!

மத்தியில் பா.ஜ.க மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதுதான் அனைத்து எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. அந்த வகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கிறது. ஆனால், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று நினைக்கும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒரு வழியில் போய்க்கொண்டிருக்கும் நிலையில், மம்தா பானர்ஜியோ தனி வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி

பா.ஜ.க-வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுடன் கைகோத்தால்தான், பா.ஜ.க-வுக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதை உணர்ந்துதான், தி.மு.க உட்பட பல கட்சிகள் காங்கிரஸின் தலைமையில் அணிவகுத்திருக்கின்றன.

ஆனால், ஏதோ ஒரு கணக்குடன் தனி ரூட்டில் பயணிக்கிறார் மம்தா பானர்ஜி. வேறு சில கட்சிகளும் இதைப்போன்ற ஒரு நிலைப்பாட்டில்தான் இருக்கின்றன. குறிப்பாக, டெல்லியிலும் பஞ்சாப்பிலும் ஆளும் கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, ஒடிசாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பிஜு ஜனதா தளம், தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாரத் ராஷ்டிர சமிதி, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆகிய கட்சிகள் பா.ஜ.க-வும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம் என்று நினைக்கின்றன. இந்தக் கட்சிகளை வைத்துத்தான் புதிதாக ஓர் அணியைக் கட்டுவதற்கு மம்தா முயல்கிறார்.

மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்

சமீபத்தில் மம்தா பானர்ஜியும் அகிலேஷ் யாதவும் அரசியலில் நெருக்கமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கொல்கத்தா சென்ற அகிலேஷ் யாதவ், அங்கு மம்தாவைச் சந்தித்தார். கடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கு அகிலேஷ் ஆதரவு அளித்தார். அதற்கடுத்து, உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, சமாஜ்வாடி கட்சிக்காக மம்தா பிரசாரம் செய்தார்.

அகிலேஷ் யாதவ் உடனான சந்திப்புக்குப் பிறகு, மூன்று நாள் பயணமாக ஒடிசா சென்ற மம்தா பானர்ஜி, மார்ச் 23-ம் தேதி புவனேஸ்வரில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்தித்தார். பிறகு, இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “நாட்டின் கூட்டாட்சி அமைப்புமுறையை வலுப்படுத்துவதுடன், அதை நீடித்து நிலைத்திருக்கப் பாடுபடுவோம். இது தவிர, வேறு எந்த அரசியல் பேச்சும் நடைபெறவில்லை” என்றார் நவீன் பட்நாயக். கூட்டாட்சி அமைப்புமுறை குறித்து நவீன் பட்நாயக்கின் கருத்தைத் தாம் ஆதரிப்பதாக மம்தா கூறினார்.

மம்தா பானர்ஜி – நவீன் பட்நாயக்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 3-வது அணி அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தீவிர அரசியல் விவகாரங்கள் குறித்து ஆழமாக நாங்கள் விவாதிக்கவில்லை. எங்களுடைய பழைய நட்பைப் பகிர்ந்துகொண்டோம்” என்றார் நவீன் பட்நாயக்.

‘பா.ஜ.க-வும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டை இந்தக் கட்சிகள் எடுக்கலாம். ஆனால், இந்த அணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது இவர்களுக்குள் மிகப்பெரிய பிரச்னையாக எழக்கூடும். மம்தா பானர்ஜியைப் பொறுத்தளவில், தன்னுடைய தலைமையில் அணி அமைய வேண்டும் என்று கருதுவதாகவே தெரிகிறது. ஆனால், மற்ற தலைவர்கள் அவரது தலைமையை ஏற்பார்களா என்பது சந்தேகமே.

அரவிந்த் கெஜ்ரிவால் – ஆம் ஆத்மி

அரசியலிலும் அனுபவத்திலும் வயதிலும் மூத்தவரான நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜியைத் தலைவராக ஏற்பாரா?திரிணாமுல் காங்கிரஸ் ஒரு மாநிலத்தில் மட்டுமே ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி. ஆனால், டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி இருக்கிறது. இந்தக் கட்சிக்கு கோவாவிலும் குஜராத்திலும் எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். மேலும், ஆம் ஆத்மியை ஒரு தேசியக் கட்சி என்றும் சொல்கிறார்கள். அந்தக் கட்சியின் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், மம்தாவின் தலைமையை ஏற்பாரா? தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், மம்தா தலைமையை விரும்பவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

ஆந்திராவை ஆளுகிற ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் இல்லை. அதற்காக, அவரை மம்தா பானர்ஜி தனது கூட்டணிக்கு அழைக்கவில்லை. காரணம், பா.ஜ.க கூட்டணியில் இல்லையென்றாலும், பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க-வை ஆதரித்திருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. மேலும், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவொரு கூட்டணியிலும் சேர்ந்துகொள்வதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆர்வம் கிடையாது.

மம்தா பானர்ஜி

இப்படியான சூழலில், பல மாநில கட்சிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணி என்பது, எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸை எதிர்க்க பயன்படுமே அன்றி, பாஜக கூட்டணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. காட்சிகள் மாறுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து எதிர்கட்சிகளும் ஓர் குரலில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். கட்சிகளின் அடுத்தக்கட்ட நகர்வுகள் எப்படி இருக்கும் என்பது போக போக தான் தெரியும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.