ராகுல் காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் – மவுனம் காக்கும் பிஹார் முதல்வர் நிதிஷ், ஒடிசா முதல்வர் நவீன்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். எனினும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

மம்தா பானர்ஜி: ராகுல் காந்தி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வரும் திரிண மூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மவுனம் காத்து இருந்தார். அவர் நேற்று தனது மவுனத்தை கலைத்தார்.

அவர் கூறும்போது, “எதிர்க்கட்சிகளின் தலைவர்களை பாஜக குறிவைக்கிறது. குற்றப் பின்னணி உடைய பாஜக தலைவர்கள் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுகளுக்காக அவர்களின் பதவி பறிக்கப்படுகிறது. இந்திய ஜனநாயகத்தின் தரம் தாழ்ந்து வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார்.

தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் கூறும்போது, “ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இது இந்திய ஜனநாயகத்தின் கருப்புநாள். பிரதமர் நரேந்திர மோடியின் சர்வாதிகாரம் உச்சத்தை தொட்டுள்ளது. நாடாளுமன்றத்தைகூட பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது. அவசர காலத்தைவிட தற்போதைய நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து கட்சிகளும் பாஜகவின் அராஜகத்தை எதிர்த்து போரிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறும்போது, “திருடன் என்று கூறுவது ஒரு குற்றமா? அதற்காக ராகுல் காந்தியின் பதவியை பறித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளனர். திருடர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். ஆனால் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டு உள்ளார். ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து அரசு அமைப்புகளும் பாஜகவின் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “அவமதிப்பு வழக்குகள் என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பாஜக தாக்குதலை தொடுத்து வருகிறது. அவர்களின் பதவிகளை பறித்து வருகிறது. அந்தவகையில் இப்போது ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

நிதிஷ் நிலைப்பாடு என்ன?: பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சிகளின் போராட்டத்திலும் ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்கவில்லை.

வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட நிதிஷ் குமார் விரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூழலில் அவரது மவுனம் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தனி வழியில் நவீன் பட்நாயக்: வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணியை உருவாக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுதொடர்பாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்,ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் உள்ளிட்டோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த சூழலில் ராகுல் காந்தி விவகாரத்தில் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட சிலரும் இதுவரை மவுனத்தை கலைக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.