ஜாக்கிரதை… ஊறவைத்த அரிசை சாப்பிடக்கூடாது… 8 வயது சிறுமி உயிரிழப்பு

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (50).  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இவரது மனைவி பரமேஸ்வரி. மாரிசாமி – பரமேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி. இவர் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகள் நிகிதா லட்சுமி (8), அங்குள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.  

இந்நிலையில், நிகிதா லட்சுமி நேற்று மாலை சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை நான்கைந்து தடவை எடுத்து சாப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, நிகிதாவுக்கு திடீரென அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் பரமேஸ்வர மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை கொண்டு சென்றனர். 

அதைத்தொடர்ந்து ஆட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, இங்கு போதிய வசதிகள் இல்லை. அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அங்கிருந்த செவிலியர் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோர் நிகிதா லட்சுமியை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு  கொண்டு வந்தனர்.  அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் நிகிதா லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார் .

இது குறித்து நிகிதா லட்சுமியின் தாய் பரமேஸ்வரி கூறுகையில்,”நிகிதா லட்சுமிக்கு ஒருநாள் மட்டும் பலத்த காய்ச்சல் இருந்தது. சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை சாப்பிட்டார். மேலும் பிஸ்கட்டுகளையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்தார். இவர் எதனால், எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அது மட்டுமே எங்களுக்கு தெரிகிறது. உடலில் வேறு எந்த கோளாறும் இருந்ததாக எங்களுக்கு தெரியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்தார். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.