நாமக்கல்: வளர்ப்பு பன்றிகளுக்கு `ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல்' – குழி தோண்டி புதைக்க உத்தரவு!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர், கடந்த சில வருடங்களாக வெண் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட இரண்டு பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தன. அதைத் தொடர்ந்து, நாமக்கல்லிலுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இதனால், அவரது பண்ணைக்குச் சென்ற மருத்துவக் குழுவினர், இறந்த பன்றிகளின் மாதிரிகளைச் சேகரித்து, போபாலிலுள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். அப்படி செய்யப்பட்ட ஆய்வின் முடிவில், ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கிய பன்றிகள் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

வெண்பன்றி பண்ணை

இந்த நிலையில், அந்தப் பண்ணையில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதோடு, மேலும் அங்கு குட்டிகள் உட்பட 20 வெண் பன்றிகள் இருப்பதை உறுதிசெய்திருப்பதாகவும், அவற்றை 15 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி புதைக்க முடிவுசெய்திருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், அந்த வெண் பன்றி வளர்ப்புப் பண்ணையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்ததோடு, பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், பண்ணை உரிமையாளர் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை முன்கூட்டியே தெரிந்ததால், பண்ணையில் 20 பன்றிகளை வைத்துவிட்டு மீதமுள்ள 600-க்கும் மேற்பட்ட பன்றிகளை தன்னுடைய உறவினரின் விவசாயத் தோட்டத்தில் மறைத்துவைத்திருப்பதாக வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்தப் பண்ணைக்கு அருகில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதால், கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்திருக்கின்றனர். மேலும், கிராம மக்கள் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், புகார் தெரிவிப்பவர்களை பண்ணை உரிமையாளர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து கால்நடை மருத்துவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிகாரிகளுடன் சென்று பன்றி பண்ணையில் ஆய்வு செய்தோம். அங்கு, 20 பன்றிகள் மட்டுமே இருந்தன. 20 பன்றிகளுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவியிருப்பதால், அவற்றை புதைக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவாது. பன்றிகள் மூலம் மற்ற பன்றிகளுக்கு மட்டுமே இந்தக் காய்ச்சல் பரவும். அதனால், பொதுமக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. பன்றிக்காய்ச்சல் பரவும் தன்மை தடுக்கப்பட்டிருப்பதால், மற்றப் பண்ணைகளுக்கோ, கால்நடைகளுக்கோ பரவ வாய்ப்பில்லை. அதனால், கால்நடை வளர்ப்போரும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. 600-க்கும் மேற்பட்ட பன்றிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் பரவும் வீடியோ குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் பார்த்த வரையில் 20 பன்றிகள் மட்டுமே இருந்தன. இருந்தாலும், அது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.