LVM3-M3 ஒன்வெப் இந்தியா-2 மிஷன்: 36 செயற்கைக்கோள்கள் உடன் விண்ணில் பாய்ந்த ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இஸ்ரோ (ISRO) உடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து ஆராய்ச்சிக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரோ உடன் இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் குரூப் நிறுவனத்தின் நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்ஸ் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.

ஒன்வெப் – இஸ்ரோ ஒப்பந்தம்

ஒன்வெப் நிறுவனம் சர்வதேச அளவில் அரசு, தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பை உறுதி செய்வதில் தீவிர பங்காற்றி வருகிறது. இதில் பாரதி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. ஒன்வெப் நிறுவனம் பூமியின் தாழ் வட்டப் பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

செயற்கைக்கோள்கள் ஏவ திட்டம்

அதன்படி, தனது பயணத்தின் ஒருபடியாக 72 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு செய்தது. அதில் கடந்த அக்டோபர் 23, 2022 அன்று 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் 5.8 டன் எடையுள்ள எஞ்சிய 36 செயற்கைக்கோள்களை ஏவ நேற்றைய தினம் 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. LVM3-M3 ஒன்வெப் இந்தியா-2 மிஷன் என்ற பெயரில் ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன.

மூன்று படிநிலைகள்

LVM3 என்பது மூன்று படிநிலைகளை கொண்ட ராக்கெட் ஆகும். முதல் நிலையில் இரண்டு எஸ்200 சாலிட் மோட்டார்கள் உள்ளன. இரண்டாவது நிலையில் L110 ட்வின் லிக்யூட் எஞ்சின்கள் இருக்கின்றன. மூன்றாவது நிலையில் சி25 கிரையோஜெனிக் அப்பர் ஸ்டேஜ் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 26) காலை சரியாக 9 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டது.

18வது ஏவுதல்

43.5 மீட்டர் நீளமுள்ள ராக்கெட் 5,805 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. இது 450 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் 87.4 டிகிரி சாய்வில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்வெப் நிறுவனம் கூறுகையில், இதுவரை 17 ஏவுதல்கள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன. 18வது ஏவுதலின் வெற்றிக்காக காத்திருக்கிறோம்.

இலக்கை நெருங்கிய ஒன்வெப்

இஸ்ரோ – நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து 36 செயற்கைக்கோள்களை ஏவ முடிவு செய்தது. மொத்தமாக 616 செயற்கைக்கோள்களை ஏவி சர்வதேச அளவில் தகவல் தொடர்பு சேவையை முழுமையாக வழங்க செயல்பட்டு வருகிறோம். இன்று ஏவப்படும் நிகழ்வு வரலாற்றில் முக்கியமான மைல்கல்.

இதன்மூலம் சர்வதேச அளவில் LEO விண்வெளி கூட்டமைப்பை வரலாற்றிலேயே முதல்முறை அடைய உள்ளோம் என்று தெரிவித்தனர். இந்த சூழலில் LVM-3 ராக்கெட் ஆனது 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சற்றுமுன் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் ஒன்வெப் நிறுவனம் 582 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி தனது இலக்கை நோக்கி மேலும் நகர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.