காங்கிரஸூடன் கரம் கோர்க்க தயாராகும் மம்தா – மாறும் டெல்லி களம்

காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை சபாநாயகரால் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் ஆலோசிக்க அழைப்பு விடுத்தார். இதில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்று ஆதரவை தெரிவித்திருக்கிறது.

காங்கிரஸ் மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்க சென்றபோது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இது டெல்லி அரசியல் களம் மாறுவதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. இதுவரை பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் மம்தா பானர்ஜி காங்கிரஸூடன் அதே பாணியை கடைபிடித்து வந்தார். 

தேசிய அளவில் 3வது அணியை உருவாக்கும் எண்ணத்திலும் இருந்த அவர், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த பிரதான எதிர்கட்சி தலைவர்கள் சந்தித்து புதிய அணியை உருவாக்கும் திட்டத்தில் இருந்தார். ஆனால், ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்துக்குப் பிறகு நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டிருப்பதை உணர்ந்திருக்கும் மம்தா தன்னுடைய நிலைப்பாட்டிலும் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். 

இதனடிப்படையிலேயே அவர் மத்திய அரசை கடுமையாக எதிர்க்கும் ராகுல்காந்திக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவு கொடுக்கும் மனநிலைக்கு நகர்ந்திருக்கிறார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருப்பு முகக்கவசத்துடன் நாடாளுமன்ற அவை நடவடிக்கையில் பங்கேற்றிருக்கின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் மல்லிகார்ஜூனா கார்கே அறையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இது டெல்லி அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக உற்றுநோக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.