தமிழக மீனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசின் பதில் என்ன தெரியுமா?

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தொடர் தாக்குதல் தொடர்பாக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம் ஆகியோர் எழுத்து மூலம் எழுப்பிய கேள்விக்கு, 23.03.2023 அன்று இந்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்தார்.

கேள்வி எண்-2623 என்று வகைப்படுத்தப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்.

வைகோ மற்றும் திமுகவைச் சேர்ந்த எம்.சண்முகம் எழுப்பிய கேள்விகள்

(அ) இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை அதிகரித்து வருவது குறித்து இந்திய அரசு கவனம் செலுத்துகிறதா?

(ஆ) அப்படியானால், அதன் விவரங்கள்;

(இ) அண்மையில் இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கைக் கடற்படையினர், பல இடங்களில் தமிழக மீனவர்களை தாக்கியிருக்கிறார்கள். இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

(ஈ) தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படை வீரர்களுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதா? (உ) அப்படியானால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

(ஊ) மீனவர்கள் காயம் அடைந்ததற்கும், என்ஜின், பேட்டரி மற்றும் பிற பொருட்களை சட்டவிரோதமாக பறிமுதல் செய்ததற்கும் இலங்கையிடம் இழப்பீடு கோரப்பட்டதா? அப்படியானால், அதன் விவரங்கள்?

தமிழக மீனவர்கள் தொடர்பான கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் அளித்த பதில்கள்

(அ முதல் ஊ வரை) இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றிய செய்திகள் கிடைக்கும்போதெல்லாம், இந்திய அரசு இராஜதந்திர வழியில் இலங்கை அரசிடம் எடுத்துரைக்கிறது.

அண்மையில், 2023 பிப்ரவரி 27 அன்று இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  13 மார்ச் 2023 அன்று இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

2020 செப்டம்பரில் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டின் போது, அப்போதைய இலங்கை பிரதமருடன் இந்தியப் பிரதமர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் காணொலி வாயிலாக இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதித்தனர்.

2021 ஜனவரி 5-7 வரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கொழும்புக்குச் சென்ற போது, இலங்கை மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 2-5 ஆம் தேதி வரை இலங்கைக்குச் சென்றிருந்த போது, இலங்கையின் அப்போதைய வெளிவிவகாரச் செயலாளரின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிபோதும் இந்த விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஜனவரி 15, 2022 அன்று, இலங்கையின் அப்போதைய நிதியமைச்சருடனான சந்திப்பின் போது, இலங்கைக் காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எடுத்துரைத்தார். மார்ச் 2022 இல் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்குச் சென்ற போது, இலங்கை மீன்வளத் துறை அமைச்சருடன் இந்த விடயமாக கலந்துரையாடினார். மீண்டும் 2023 ஜனவரி 19-20 வரையிலான இலங்கை பயணத்தின்போதும் இது தொடர்ந்தது.

பின்னர் 4 மார்ச் 2023 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகையின் போதும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இந்த விவகாரம் பேசப்பட்டது.

நவம்பர் 2016 இல் 2+2 முயற்சியைத் தொடர்ந்து, இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் மீன்வள அமைச்சர்கள் புது தில்லியில் சந்தித்தபோது, இருதரப்பு கூட்டுப் பணிக்குழு அமைக்கப்பட்டது. மார்ச் 2022 அன்று, இரண்டு அரசுகளின் கூட்டுக் குழுவினர் 5வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவர்கள் பிரச்சினை முழு அளவில் விவாதிக்கப்பட்டன.

மீனவர்கள் பிரச்சினையை முற்றிலும் மனிதாபிமானம் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினையாகக் கருதுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்று இரு தரப்பினரும் உறுதியளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசு, நமது மீனவர்களின் கவலைகளை நன்கு உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக தொடர்ந்து பாடுபடுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.