ஆப்கானிஸ்தானில் போருக்கு பின்னான சோகம்: வெடிக்காத குண்டுகளுக்கு இரையான 700 குழந்தைகள்; யுனிசெப் அமைப்பு

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிரான போரில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலீபான்கள் தலைமையில் அரசு நடந்து வருகிறது. பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

போரால் பாதிக்கப்பட்ட அந்நாட்டில், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். புதிய அரசின் கட்டுப்பாடுகளும் அவர்களை இன்னலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில் போரில் பயன்படுத்தப்பட்டு வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றால் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என வேதனை தெரிவித்து உள்ளது.

கடந்த வாரம், அந்நாட்டில் வெடிக்காத குண்டுகளால் 8 பேர் உயிரிழந்தனர். அவற்றை எடுத்து அவர்கள் விளையாடியபோதும், உலோக துண்டுகளை எடுத்து விற்பதற்காக சேகரித்தபோதும் இந்த சம்பவம் நடந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதுபற்றி காபூல் நகரவாசியான ரோகாய் என்பவர் கூறும்போது, வறுமை, வேலையின்மை ஆகியவற்றால் குழந்தைகள் மலை பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அவர்கள் அந்த பகுதியில் கிடைக்க கூடிய குச்சிகள் அல்லது நிலக்கரி ஆகியவற்றை உணவுக்காக சேகரிக்கின்றனர். ஆனால், அதற்கு முந்தின ஆண்டுகளில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி அவர்கள் உயிரிழக்கின்றனர் என கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கும் இதுபற்றிய போதிய விவரங்கள் தெரிவதில்லை. நில கண்ணிவெடிகள், வெடிக்காத பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள் மற்றும் அதுபோன்ற பிற ஆயுதங்களால், நாட்டில் குழந்தைகள் உள்பட பலர் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.