கச்சதீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படையினர்

கச்சதீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் (27) விளக்கமளித்த போதே இதனை தெரிவித்துள்ளனர்.

கச்சதீவில் வேறு எந்த விஹாரை அல்லது மத நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் கடற்படையினர் வலியுறுத்தியுள்ளனர்.

கச்சதீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

நிலப்பரப்பில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் உள்ள மக்கள் வசிக்காத தீவான கச்சத்தீவை சுற்றி பாதுகாப்பைக் கையாள்வதற்காக இலங்கை கடற்படை ஒரு கடற்படைப் பிரிவை நிறுவியுள்ளது.

அத்துடன் இலங்கை பௌத்த சங்கத்தின் அனுசரணையின் கீழ் கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தையும் கடற்படையினர் கவனித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் கச்சதீவு தேவாலய திருவிழாவைத் தவிர, ஒவ்வொரு நாளும், கடற்படை வீரர்கள் தேவாலய வளாகத்தை சுத்தம் செய்து நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கச்சதீவில் கடமைகளில் உள்ள கடற்படைப் பிரிவில் பணிபுரியும் பெரும்பாலானோர் பௌத்தர்கள் என்றும் கடற்படையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஒரு சிறிய புத்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருவதாகவும் இதனை தவிர, கட்டமைப்புகள் வேறு எவையும் தீவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் இலங்கையின் கடற்படை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.