புதுச்சேரியில் காலி பணியிடங்களில் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி நிரந்தரம்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத் துறையில் காலி பணியிடங்களில் தேசிய சுகாதார இயக்கக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:

‘பிரகாஷ்குமார்(சுயே): “கரோனா தடுப்புப் பணிக்கு கடந்த 9.9.2020ல் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர், ஏஎன்எம் ஆகியோர் ஒப்பந்த அடிப்படையிலேயே பணி செய்து வருவதை அரசு அறியுமா? அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா?”

முதல்வர் ரங்கசாமி: “அவர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை ஒப்பந்தம் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அவர்களை 3 முறை ஒப்பந்தம் நீட்டித்துள்ளோம். வாய்ப்பிருந்தால் பணி நிரந்தரம் பற்றி ஆலோசிக்கலாம்.”

அப்போது எதிர்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் நேரு, கல்யாணசுந்தரம், நாஜிம், வைத்தியநாதன், நாகதியாகராஜன், ஜான்குமார், ரிச்சர்டு, ரமேஷ், ஆகியோர் கரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சுகாதாரத்துறையில் உள்ள எய்ட்ஸ் கட்டுப்பாடு, ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஆஷா பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

முதல்வர் ரங்கசாமி: “நீண்டகாலமாக தேசிய ஊரக சுகாதார இயக்ககத்தில் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்ளனர். சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் சுகாதார இயக்கக ஊழியர்களை நிரப்ப உள்ளோம். அதன்பிறகு படிப்படியாக மற்றவர்களுக்கு வாய்ப்புக்கேற்ப பணி அளிக்கப்படும்.”

எதிர்கட்சித் தலைவர் சிவா: “மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சராக இருந்தபோது வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என ஏஎன்எம்களை பணிக்கு எடுத்தனர். தற்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிகராக சாலைதோறும் சென்று பணிகளை செய்கின்றனர். அவர்கள் முழுநேரமும் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படுகிறது. இதை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுங்கள். முதல்வர் இதை மனசாட்சியோட அணுக வேண்டும்.”

முதல்வர் ரங்கசாமி: “108 ஆம்புலன்ஸ்கள் அவுட்சோர்ஸ் மூலம் பணியாற்றுகின்றனர். அவர்களையும் சுகாதாரத்துறைக்குள் கொண்டு வர முடிவு எடுத்துள்ளோம். எய்ட்ஸ் கட்டுப்பாட்டில் பல ஆண்டுகள் பணிபுரிந்தோர் இருந்தாலும் அவர்களையும் இதில் இணைப்போம். அதன்பிறகு காலியிடங்களைப் பொருத்து இதர பணியாளர்களைக்கொண்டு வருவோம்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.