22 இலட்சத்திற்கும் மேற்பட்ட நலன்புரி விண்ணப்பங்களின் தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறை நிறைவு

மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் சரியான தகவல்களை வழங்கி பலன்களை இழப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரிகளிடம் கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவுகளுக்குத் தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தில், தற்போது நடைபெற்று வரும் தகவல் கணக்கெடுப்பு மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கை மூலம் பெறப்பட்ட 22 இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 340 பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பெறப்பட்ட 37 இலட்சம் விண்ணப்பங்களில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்புகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களில் பெரும்பாலானவை மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதுடன், இது மொத்த விண்ணப்பத்தில் சதவீதமாக 82.1% ஆகும்.

அம்பாறை மாவட்டத்தில் 78.3%, களுத்துறை மாவட்டத்தில் 74.5%, காலி மாவட்டத்தில் 73.3% மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் 71.7% என முழு நாடளாவிய ரீதியில் 2,227,888 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. (இணைப்பு 01)

இந்தத் தகவல் கணக்கெடுப்புப் பணி, மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்பதால், உரிய தகவல் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு விரைவில் துல்லியமான தரவுகளை வழங்குமாறு விண்ணப்பதாரர்களை அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், உரிய திகதிக்கு முன்னர் சரியான தகவல்களை வழங்கத் தவறும் விண்ணப்பதாரர்கள் நலன்புரி உதவிகளை இழக்க நேரிடும் என்றும் அரசாங்கம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.