8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின்

தனுஷின் முதல் ஹீரோயின் ஷெரின். 'துள்ளுவதோ இளமை' படத்தில் அவருடன் நடித்தார். அதன்பிறகு ஸ்டூடன்ட் நம்பர் ஒண், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக சந்தானம், உதயநிதி நடித்த 'நண்பேண்டா' படத்தில் நடித்தார்.

அதன்பிறகு சினிமா வாய்ப்புகள் இன்றி சின்னத்திரை பக்கம் வந்தவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரைக்கு வருகிறார். அவர் நடித்து முடித்துள்ள 'ரஜினி' என்கிற படம் ஏப்ரல் மாதம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல், கோவை பாலசுப்பிரமணியம் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். விஜய் சத்யா நாயகனாக நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார். மனோ வி.நாராயணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் பற்றி இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது: படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம். படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.