தமிழகத்தில் மண் ஆரோக்கியத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது? – மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் விளக்கமாகப் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியான செந்தில்குமார் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்வியில், ”இந்தியாவின் மிக முக்கியமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? இது, செயல்படுத்தப்படுகிறது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகளுக்கு மண் ஆரோக்கியத் திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது? குறிப்பாக மண் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நோக்கத்தினை மத்திய அரசு அடைந்துள்ளதா? இத்திட்டம் துவங்கப்பட்டு அதில் மத்திய அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன மேலும் முக்கியமாக விவசாயிகளுக்கு தேவையான மண் பரிசோதனை நிலையங்களை இந்தியாவில் அமைத்துள்ளதா? அதற்குரியப் பலன்களை விவசாயிகள் பெறுகிறார்களா?” எனக் கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்தர்சிங் தோமர் கூறியதாவது: ”தமிழ்நாடு உட்பட இந்தியாவில் மண் ஆரோக்கிய அட்டை திட்டம் 2015 பிப்ரவரி 19ஆம் தேதி முதல் செயல்படுகிறது. இத்திட்டத்திற்காக, கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 148.09 லட்சம் மண் அட்டைகளை விவசாயிகள் பெற்றுள்ளனர். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்க அவர்களின் விவசாய நிலங்களுக்கு மண் சுகாதார அட்டை வழங்கி சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

ரசாயன உரங்களின் நுகர்வை குறைக்கவும் இயற்கை உரங்களின் நுகர்வு அதிகரிக்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக உள்ளது. இதனால் மண்ணின் வளம் குறையாமலும் அதேசமயம் விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கவும் இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் நிறைய பலன் அடைவதால் மண் சுகாதார அட்டை நாடு முழுவதும் பரவலாக உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இத்திட்டத்தின் மூலம் 6.45 செயல்விளக்கக் கூட்டம், 93,781 விவசாயிகளுக்கு தனித்துவமான பயிற்சி வழங்கப்பட்டுள்ளன. மேலும், 7,425 விவசாய மேலாக்கல் இத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட வண்ணம் உள்ளது. தற்பொழுது கைபேசிகளின் பயன்பாடு பெருகி உள்ளதால் கியூ.ஆர் கோடு மூலம் மண் மாதிரிகளை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோல் எண்ணற்ற சேவைகளை மண் சுகாதார அட்டை மூலம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் தெரிவித்தார்.

இத்துடன் நாடு முழுவதிலும் உள்ள மண் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையும் மாநிலங்கள் வாரியாக மக்களவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இவை, 2013-14 முதல் 2022-23 ஆண்டுகள் வரையில் அமைக்கப்பட்டவை. இந்த அட்டவணையின்படி, நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களில் தெலுங்கானாவில் மிக அதிகமாக மண் பரிசோதனை நிலையங்கள் எண்ணிக்கை 2,764 உள்ளன. இதன் எண்ணிக்கை தமிழகத்தில் 20 மற்றும் புதுச்சேரியில் 10 உள்ளன. இவற்றில் சிறிய அளவிலான மண் பரிசோதனை நிலையம் தமிழகத்தில் ஒன்று கூட இல்லை. தேசிய அளவில் மண் பரிசோதனை நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 11,840 ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.