“நீங்களா ஊழலுக்கு எதிரானவர்?” – பிரதமர் மோடி மீது பட்டியலிட்டு கார்கே ஆவேசம்

புதுடெல்லி: “ஊழல் புரிந்த தனிநபர்களின் குழுவுக்குத் தலைமை தாங்கும் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர்களின் மீது அமலாக்கத் துறையை ஏவி விடுகிறார்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சிகளின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் தொடர்ச்சியாக இந்தியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதானியின் ஷெல் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தமானது? லலித் மோடி, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி, விஜய் மல்லையா, ஜெடின் மேதா போன்றவர்கள் உங்களின் பிரஷ்டசர் பாகோ அபியானின் உறுப்பினர்களா? இந்தக் கூட்டணிக்கு நீங்கள் தான் ஒருங்கிணைப்பாளரா? உங்களை ஊழலுக்கு எதிரானவராக காட்டிக் கொள்வதை நிறுத்துங்கள்.

முதலில் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்: கர்நாடகாவில் உங்களுடைய அரசு ஏன் 40 சதவீத கமிஷன் அரசு என அழைக்கப்படுகிறது? மேகாலயாவின் ஊழல் அரசில் நீங்கள் ஏன் அங்கம் வகிக்கிறீர்கள்? பாஜக தலைவர்கள், ராஜஸ்தானில் சஞ்சிவாணி கூட்டுறவு ஊழல், மத்தியப் பிரதேசத்தில் போஷன் ஊழல், சத்தீஸ்கரில் ‘நான்’ (NAAN) ஊழலில் ஈடுபடவில்லையா? 95 சதவீத எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத் துறை விசாரணை, பாஜக கலைவர்கள் என்ன சலவை எந்திரத்தால் தூய்மை செய்யப்பட்டவர்களா?

நீங்கள் 56 இன்ச் மார்பினை உடையவர் என்றால், நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவை அமைத்துவிட்டு, 9 வருடங்களாக சந்திக்காத பத்திரிகையாளர்களை சந்தியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லியில் உள்ள கார்கேவின் இல்லத்தில் 18 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூடி, பாஜகவிற்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், இந்தக் கூட்டத்தில் அதானி குழும விவகாரத்தில் விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைப்பது, ராகுல் காந்தியின் தகுதி இழப்பு நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தினைத் தொடர்ந்து கார்கேவின் இந்த வார்த்தைத் தாக்குதல் வந்துள்ளது.

குற்ற வழக்கில் தண்டனை பெற்று தனது எம்பி பதவி தகுதி இழப்பு நடவடிக்கைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “இங்கு ஒரு கேள்வி இருக்கிறது. திடீரென அதானியின் ஷெல் நிறுவனத்திற்கு 20,000 கோடி ரூபாய் பணம் வருகிறது. அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அவற்றில் சில பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள். நமது ட்ரோன் மற்றும் ஏவுகணை வளர்ச்சிக்காக யாருடைய பணம் செலவிடப்படுகிறது? பாதுகாப்பு அமைச்சகம் ஏன் இதுகுறித்து கேள்வி எழுப்பவில்லை?” என்று தெரிவித்திருந்தார்.

கபில் சிபல் குற்றச்சாட்டு: அதேபோல, ஊழல்வாதிகள் எல்லாம் ஓர் அணியில் இணைந்துள்ளனர் என்ற பிரதமர் மோடியின் கருத்தினை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் விமர்சித்துள்ளார். செவ்வாய்க்கிழமை பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது, நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க, இந்தியாவிற்கு எதிரான சக்திகள் எல்லாம் சட்டப்பூர்வமான நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள கபில் சிபில், “பிரதமேரே… எதிர்க்கட்சிகள் பயந்துவிட்டன ஊழல்வாதிகளெல்லாம் ஓரணியில் உள்ளன. ஆனால் மோடி ஜி… சிவ சேனா, அகாலி தளம், ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஒரு காலத்தில் உங்களுடன் கூட்டணியில் இருந்தன. அவர்களுடன் இணைந்து நீங்கள் ஆட்சி அமைத்துள்ளீர்கள். இப்போது ஊழல்வாதிகளாக இருக்கும் அவர்கள் அப்போது ஊழல்வாதிகளாக மாறிவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.