நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்கள் கசிந்தது எப்படி? காங்கிரஸ் புகார்

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்துள்ள நிலையில் அந்த தகவல்கள் கசியப்பட்டு சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெறப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு தனியார் இடைக்கால பயிற்சி நிறுவனங்களும் பெற்றோர்களை வணிகமயமாக்கும் எண்ணத்தோடு கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

எனவே மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதன் அடிப்படையில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார், மத்திய அரசினுடைய நீட் தேர்வு துறை இந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் அவர்களுடைய தகவலை பதிவேற்றிய நிலையில், அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு விட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது சட்டப்படி குற்றமாகும் எனக் கூறிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், தற்போது இந்த தகவல்கள் கசியப்பட்டு தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை மூளைச்சலவை செய்வதாக தெரிவித்தார்.

தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத்தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். எனவே மத்திய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.