திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்று பிறப்புறுப்பில் தீ வைத்த மேஸ்திரி – போலீஸ் விசாரணையில் `பகீர்'

சென்னை கண்ணகிநகர், எழில்நகரைச் சேர்ந்தவர் முனியம்மாள் (58). இவர், அண்மையில் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார். அதில், “நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய கணவர் முனியன், கட்டட வேலை செய்து வந்தார். தற்போது உடல் சரியில்லாததால் வீட்டிலிருந்து வருகிறார். நான் ஒக்கியம்பேட்டையிலுள்ள அரசுப் பள்ளியில் தினக்கூலியாக தூய்மைப் பணி செய்து வருகிறேன். என்னுடைய இரண்டாவது மகள் மல்லிகா.

அவரை பண்ருட்டியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தோம். அவர்களுக்கு சூர்யா என்ற மகன் பிறந்தான். சூர்யாவுக்கு இரண்டு வயதானபோது முருகன் இறந்துவிட்டார். அதனால் இரண்டு வருடங்கள் கழித்து கண்ணகி நகரைச் சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக மல்லிகா திருமணம் செய்துகொண்டார். அவருக்கும் மல்லிகாவுக்கும் மணிகண்டன் என்ற மகன் பிறந்தான். மணிகண்டனுக்கு ஏழு வயதானபோது, அந்த நபருக்கும் மல்லிகாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏறபட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஜெயக்குமார்

இதையடுத்து மல்லிகாவுக்கும் கண்ணகி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவியாக கடந்த நான்கு மாதங்களாக காரப்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். என் மகள் மல்லிகாவுக்கும், அவளுடன் வாழ்ந்து வந்த ஜெயக்குமார் என்பவருக்கும் அடிக்கடி சிறு, சிறு பிரச்னைகள் நடக்கும், அப்போதெல்லாம் சில சமயங்களில் என் மகளை ஜெயக்குமார் அடித்து துன்புறுத்தி வந்தார். இது தொடர்பாக என் மகள் மல்லிகா என்னிடம், ஜெயக்குமார் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 25.3.23-ம் தேதி இரவு 9 மணியளவில் என் செல்போனுக்கு போன்செய்த ஜெயக்குமார், `உங்க பொண்ணு என்னிடம் அசிங்கமாகப் பேசி சண்டை போட்டுட்டிருக்கா. நைட்டு தூங்கவிட மாட்றா’ என்று கூறினார். நான் அதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டேன். 26-ம் தேதி மாலை 6 மணியளவில் மல்லிகாவின் மகன் மணிகண்டன் எனக்கு போன் செய்து, `ஆயா… அம்மா இறந்துட்டா’ என்று சொன்னான். நான் உடனே கிளம்பி மல்லிகா வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, என் மகளின் தலைப்பகுதி யிலும், முகத்திலும் ரத்தக் காயங்கள் இருந்தன. மேலும், அவரின் பெண்ணுறுப்பில் தீக்காயங்களுடன் மல்லிகா இறந்துகிடந்தாள்.

என் மகள் இறப்பில், அவளுடன் வாழ்ந்து வந்த ஜெயக்குமார்மீது சந்தேகம் இருக்கிறது. எனவே என் மகள் மல்லிகாவின் இறப்புமீது விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஆர்.ஜி.தயாள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து கண்ணகிநகர் போலீஸாரிடம் பேசினோம். “மல்லிகா என்பவர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் அவருடன் வாழ்ந்து வந்த ஜெயக்குமாரைக் கைதுசெய்திருக்கிறோம். அவரிடம் விசாரித்தபோது ஜெயக்குமார், மேஸ்திரியாக வேலைப்பார்த்து வந்திருக்கிறார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இந்தச் சமயத்தில் தனியாக வசித்து வந்த மல்லிகா, ஜெயக்குமாரிடம் சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகே திருமணம் செய்துகொள்ளாமல் மல்லிகாவும் ஜெயக்குமாரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். மல்லிகாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக ஜெயக்குமார் விசாரணையின்போது தெரிவித்தார்.

கைது

தொடர்ந்து ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மல்லிகாவிடம் ஜெயக்குமார் தன்னுடைய நண்பரான டிரைவர் பாண்டியன் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அதன்பிறகு பாண்டியனும், மல்லிகாவும் நெருங்கிப் பழகி வந்திருக்கின்றனர். அதை ஜெயக்குமார் கண்டித்திருக்கிறார். ஆனால் மல்லிகா, பாண்டியனுடன் பழகுவதை நிறுத்தவில்லை. சம்பவத்தன்று மல்லிகாவுக்கும், ஜெயக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயக்குமார், மதுபோதையில் பீர் பாட்டிலால் மல்லிகாவைத் தாக்கியிருக்கிறார். அதன் பிறகுதான் மல்லிகாவைக் கொலைசெய்துவிட்டு அவரின் பிறப்புறுப்பில் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். ஜெயக்குமார் அளித்த தகவலின்படி அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.