ஊழல் வழக்கில் டாக்டரை கைது செய்த சி.பி.ஐ.,| CBI arrested doctor in corruption case

புதுடில்லி, புதுடில்லியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சப்தர்ஜங் மருத்துவனையில் பணியாற்றி வரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மணீஷ் ராவத்தை, ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடில்லியில் உள்ள சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருபவர் டாக்டர் மணீஷ் ராவத்.

இவரிடம் மருத்துவ ஆலோசனைகள் பெறவும், அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும், மருத்துவமனையில் நிர்ணயிக்கப்பட்டதை விட, நோயாளிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இடைத்தரகர்கள் வாயிலாக இந்த தொகையை இவர் வசூலித்து வருவதாகவும் கூறப்பட்டது.

மேலும், நோயாளிகளிடம் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் இருந்து அறுவை சிகிச்சைக்கான உபகரணங்களை வாங்கும்படி டாக்டர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

மேலும் அந்த உபகரணங்களை சந்தை விலையை விட அவர்கள் அதிக விலைக்கு விற்று, அதில் டாக்டருக்கு கமிஷன் வழங்கியதாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என தெரியவந்தது.

இதை தொடர்ந்து, புதுடில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் டாக்டர் மணீஷ் ராவத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ., அதிகாரிகள், டாக்டரை கைது செய்தனர்.

அதோடு, புதுடில்லியைச் சேர்ந்த, ‘கனிஷ்கா சர்ஜிகல்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் தீபக் கட்டார், இடைத்தரகர்கள் அவ்னேஷ் படேல், மணீஷ் சர்மா, குல்தீப் ஆகியோரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.