சென்னை: “புதுமைப் பெண் திட்டத்தால் பெண்களின் உயர் கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 29 சதவீதம் அதிகரித்து உள்ளதாக உயர் கல்வித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
புதுமைப் பெண் திட்டத்தின் முதற்கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் இத்திட்டத்தின் மூலம் இடைநிற்றலில் இருந்து 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மேலும் 1,04,347 மாணவிகள் பயன்பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவியரின் சேர்க்கை அதிகரித்துள்ளதாக உயர் கல்வி துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 2021 – 2022ம் ஆண்டில் முதல் ஆண்டு சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 71,008. 2022 – 2023ம் ஆண்டில் முதல் ஆண்டு சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 91,485. இதன்படி புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவியரின் சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 29% அதிகரித்துள்ளது. வறுமை உள்ளிட்ட காரணங்களால் படிப்பை இடை நிறுத்திய பல மாணவியர், புதுமைப்பெண் திட்டத்தால் மீண்டும் உயர் கல்வியை தொடர்ந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.