உதகையில் குதிரை பந்தயத்துடன் தொடங்கியது கோடை விழா: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகள்

உதகை: உதகையில் பிரசித்திபெற்ற குதிரை பந்தயத்துடன் கோடை சீசன் தொடங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்ற குதிரைகள் இலக்கைநோக்கி சீறிப்பாய்ந்து ஓடுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். மலைகளின் அரசியான உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் மாதங்களாகும்.

அப்போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக கோடை சீசனின் தொடக்கமாக பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படும் அந்த வகையில் 136 ஆவது  குதிரை பந்தயம் தொடங்கியது.

பந்தயத்தில் பங்கேற்க சென்னை, மும்பை, பெங்களூரு, மைசூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 550 குதிரைகள் வந்துள்ளன. அவற்றுடன் 37 ஜாக்கிகள் 24 பயிற்சியாளர்களும் வந்துள்ளனர். குதிரை பந்தயத்தை காண சிறுவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

பந்தயம் தொடங்கியதும் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகளை  ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். குதிரை பந்தய ரசிகர்களால் முக்கிய பந்தயங்களாக கருதப்படும் நீலகிரி தொளசண்ட் கினீஸ் வரும் 14ம் தேதியும் டூ தொளசண்ட் கினீஸ் வரும் 15ம் தேதியும் நீலகிரி தங்க கோப்பை மே 21ம் தேதியும் நடைபெறுகிறது. இறுதி பந்தயம் மே 28ம் தேதி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.