கோவையில் முதல் பேருந்து ஓட்டுநர் ஆனார் இளம்பெண்: பணியை தொடங்கிய சர்மிளாவிற்கு குவியும் பாராட்டு

கோவை: கோவை மாவட்டத்தில் முதல் பேருந்து ஓட்டுனரான இளம்பெண் சர்மிளாவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் சர்மிளா இவருக்கு சிறு வயது முதலே வாகனங்களை இயக்குவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு லோட் ஆட்டோ ஓட்ட கற்று கொண்ட சர்மிளா அதற்கான உரிமத்தை பெற்றார். அதை தொடர்ந்து கனரக வாகனங்களை இயக்கவும் கற்றுக்கொண்ட சர்மிளா மக்களுக்காக பேருந்து ஓட்ட வேண்டும் என்ற லட்சியம் கொண்டிருந்தார். இது குறித்த செய்தியும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமானூர் செல்லும் வழித்தடத்தில் தனியார் பேருந்தில் சர்மிளாவிற்கு ஓட்டுநர் பணி கிடைத்துள்ளது. பேருந்து ஓட்டுநர் பணியை தொடர்ந்துள்ள சர்மிளாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஷர்மிளாவின் தந்தை மகேஷ் ஆட்டோ ஓட்டுநர் அவரிடமிருந்து ஆட்டோ ஓட்ட கற்றுக்கொண்ட சர்மிளா படி படியாக உயர்ந்து இன்று பேருந்து ஓட்டுநராகி இருக்கிறார். பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த இளம்பெண் சர்மிளா அம்மாவட்டத்தில் முதல் பெண் ஓட்டுநராக இருப்பது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.