சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: நள்ளிரவு முதல் அமல் – வாகன ஓட்டிகள் அதிருப்தி!

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 1) 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம்!

நாடு முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சுமார் 600 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சுங்க கட்டணம் உயர்வு!

அதன்படி இன்று (ஏப்ரல் 1) முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு மூலம் ஒரு காருக்கு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.

எந்தெந்த இடங்களில் உயர்வு?

சென்னைப் புறநகர் பகுதிகளில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னையிலிருந்து ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களை நோக்கி செல்லும் பாதைகளில் உள்ள சுங்கச் சாவடிகளிலும், மதுரை, கோவை போன்ற பிற மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பணத்தை வசூலிப்பதில் கறார் காட்டும் சுங்கச் சாவடிகள், சாலைகளை சீரமைப்பது போன்ற பணிகளை எதுவும் மேற்கொள்ளாதது வாகன ஓட்டிகள், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு மூலம் வணிகர்கள், வாகன உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயர்வு, பேருந்து கட்டண உயர்வு ஆகியவற்றுக்கு இது வழிவகுக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.