தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் முகக் கவசம் கட்டாயம்

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனாதொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 120-ஐக் கடந்துவிட்டது. அதேபோல, மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப லேசான, மிதமான, தீவிரமான என மூன்று பிரிவுகளாகப் பிரித்து, தக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்றின் முதல், இரண்டாவது, மூன்றாவது அலைகளில் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தோம். படிப்படியாக குறைந்து வந்த கரோனா தொற்று பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, எக்ஸ்பிபி மற்றும் பிஏ2 வகை ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

துபாய், சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் தினமும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 123 பேர் உட்பட இந்தியா முழுவதும் 3,095 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல, மகாராஷ்டிராவில் 694 பேர், கேரளாவில் 654, குஜராத்தில் 384, டெல்லியில் 295, கர்நாடகாவில் 205 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, ஏற்கெனவே கரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருந்தாலும், நாளை (இன்று) முதல் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் என 11,300-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும்.

நோய்த் தொற்று என்பது முதலில் மருத்துவமனைகளில்தான் அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே, மருத்துவமனைகளில் இத்தகைய சீர்திருத்தத்தை தொடங்க உள்ளோம். பொதுமக்கள் அச்சம்கொள்ளும் வகையில் பெரிய அளவிலான நோய்த் தொற்று பாதிப்புகள் இல்லை. மிதமான அளவில்தான் உள்ளன. சில தினங்கள் மருந்துகளை உட்கொண்டால், குணமடைந்து விடலாம். நம்மைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக் கவசம் அணிவதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

அபராதம் விதிக்கலாம்…: தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறைஅலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா தொற்றும்,நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்தும்தொற்றுகளும் மருத்துவமனைகளில் வேகமாகப் பரவ வாய்ப்புள்ளதால், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

இந்த அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதை,சுகாதாரத் துறை துணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிவதை செயல்படுத்த, தேவைப்பட்டால் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி சில விதிகளை (அபராதம்) அமல்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.