நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் – முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு

நியூயார்க்: ஆபாசப் பட நடிகைக்கு ரகசியமாக பணம் கொடுத்த புகாரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் இருந்த தொடர்பை மறைப்பதற்காக அவருக்கு ட்ரம்ப் 1,30,000 டாலர்கள் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மன்ஹாட்டன் நடுவர் மன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தற்போது ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் விசாரணையில் இருந்தது. அப்போது ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் ட்ரம்புக்கு எதிராக சாட்சியம் அளித்தார். மேலும் நடிகைக்கு பணம் வழங்கியதற்கான ஆதாரத்தையும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் கைப்பற்றியது. இதனால் ட்ரம்புக்கு நெருக்கடி வலுத்தது.

ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சரணடைய வேண்டும், இல்லாவிடில் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

டொனால்டு ட்ரம்ப் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்தபோது கடந்த 2006 ஜூலையில் நடந்த கோல்ஃப் போட்டியின்போது ஸ்டோர்மி டேனியல்ஸை சந்தித்தார். அப்போது ஸ்டோர்மிக்கு 27 வயது, ட்ரம்புக்கு 60 வயது. மேலும் ட்ரம்பின் மூன்றாவது மனைவி மெலனியாவுக்கு மகன் பரோன் பிறந்து 4 மாதம் ஆகியிருந்தது.

ஸ்டோர்மி கடந்த 2018-ல் வெளியிட்ட தனது புத்தகத்தில் டிரம்ப் உடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை விவரித்துள்ளார். ட்ரம்ப் உடன் உடல்ரீதியான தொடர்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இதை ட்ரம்ப் மறுத்துள்ளார்.

ஸ்டோர்மிக்கு பணம் தரப்பட்டதை கடந்த 2018 ஜனவரியில் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரையாக வெளியிட்டது. இதுவே ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக அமைந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.