பாஜ ராஜதந்திரங்கள் அனைத்தும் வீண்!; காங்கிரசுக்கு ஆதரவாக ஓரணியில் கூடும் எதிர்க்கட்சிகள்: ராகுல் சந்திக்கும் வழக்குகள்

டெல்லி: பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதையாகி விட்டது பாஜவின் கதை. எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக பல அதிரடிகளை காட்டிய பாஜ, ராகுல் விஷயத்தில் அவசரப்பட்டதால் அவர்கள் செய்த வினை பூமராங்க் போல அவர்களுக்கு எதிராக திரும்பி நிற்கிறது. ராகுல் காந்தியை பொறுத்த வரை காங்கிரசில் வலுவான தலைவராக இருந்தாலும், பாஜ அவரை எப்போதும் ஏளனம் செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தது. 2004ல் அரசியலில் தீவிரமாக களமிறங்கிய ராகுல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது 5 ஆண்டு ஆட்சியில் அதிகளவில் கவனிக்கப்பட்டார். அடுத்த பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்ட அதே வேளையில், அவரை ஒன்றும் தெரியாத ‘பப்பு’ என பாஜ ஏளனம் செய்தது.

எதிராளியை ஏளனம் செய்வது அவரை பலவீனமாக்கும் என்ற அரசியலை ராகுல் விஷயத்தில் பாஜ கனகச்சிதமாக செய்து வந்தது. விடுமுறைக்கு வெளிநாடு சுற்றுலா சென்று விடுவார், மக்களுடன் எந்த தொடர்பும் இல்லாத தலைவர், ஏழைகள் கஷ்டத்தை அறியாதவர், பிறக்கும் போதிலிருந்த தங்க ஸ்பூனில் சாப்பிட்டு வளர்ந்தவர் என ராகுலை பாஜ வேண்டுமென்றே இட்டுக்கட்டி விமர்சித்தது. அதே போல, ராகுல்  2013ல் அரசாணையை கிழித்தெறிந்தது, அவசரப்பட்டு கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியது போன்ற சில முடிவுகள் பாஜவின் கூற்றுகளை உண்மையாக்குவது போல் அமைந்தன. 2014 மற்றும் 2019ல் ராகுல் தலைமையில் மக்களவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ் படுதோல்வியையே சந்தித்தது. இதனால் பிரதமர் போன்ற பெரிய பதவிகளை வகிக்க ராகுல் லாயக்கற்றவர் என்ற பிம்பத்தை பாஜ ஏற்படுத்தியது. இதற்காக நிறைய பணத்தையும், நேரத்தையும் பாஜ செலவிட்டு அதில் வெற்றியும் பெற்றது.

பல மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்ததால், தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ், சமாஜ்வாடி போன்ற எதிர்க்கட்சிகள் கூட காங்கிரஸ் தலைமையை விரும்பவில்லை. பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதன் அவசியத்தை ராகுலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பலமுறை வலியுறுத்தியும், பல மாநிலக் கட்சிகள் அதை ஏற்பதாக இல்லை. இப்படிப்பட்ட நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணம் அவர் மீதான ‘பப்பு’ என்கிற களங்கத்தை துடைத்தெறிய உதவியது. ‘வெறுப்புணர்வை ஒதுக்கி அன்பை பரப்புவோம்’ என்ற ராகுலின் பேச்சுகள் தேசம் முழுவதும் வரவேற்பை பெற்றன.

நடைபயணத்தில் சாமானியர்களையும் எளிதில் ராகுல் அணுகிய விதம் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது. இது ராகுல் மீது மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில், அதானி விவகாரத்தை அவர் மிக ஆழமாக பயன்படுத்தினார். மோடிக்கும் – அதானிக்கும் உள்ள தொடர்பு பற்றி ராகுல் தொடர்ந்து எழுப்பிய கேள்விகள் மக்கள் மனதிலும் பாஜவைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்தின. இதனால் ராகுலின் வாயை அடைப்பதாக கருதிய பாஜ அரசு, லண்டனில் ராகுல் பேசியவற்றை வழக்கம் போல் புனையப்பட்ட கதைகளால் பூதாகாரமாக்கியது. உப்பு சப்பில்லாத அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக அவர் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த அவசர கதி வேலைகள் அனைத்தும் கேலிக்குரிய வகையில் இருந்தன. சாமானியர்களுக்கு கூட அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின. அதே சமயம் ராகுலைப் பார்த்து பாஜ அரசு எந்தளவுக்கு அஞ்சுகிறது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. அதானி விவகாரத்தை பற்றி மக்களவையில் ராகுலை பேச விடாமல் செய்தால் போதும் என பாஜ செய்த வேலைகள் அவர்களுக்கு எதிராக திரும்பி உள்ளது. எப்பொழுதும் எதிராளியை ஏளனம் செய்வதே பலன் தரும் என்பதை பாஜக மறந்து விட்டது. பாஜவின் செயல்கள் இவ்வளவு ஆண்டு காலமும் ராகுலுக்கு எதிராக கட்டிய கோட்டைகளை தவிடு பொடியாக்கி விட்டது. ராகுல் இழந்த ஆதரவை மீண்டும் அவருக்கு பெற்றுத் தந்துள்ளது.

தவறான தகுதி நீக்க நடவடிக்கையால் இன்று தேசிய அரசியலில் ராகுல் வலுவான எதிர்க்கட்சி தலைவராக வலுப்பெற்று விட்டார். இந்த விவகாரம் அனைத்து எதிர்க்கட்சிகளையும் மீண்டும் காங்கிரசை நோக்கி திருப்பி விட்டுள்ளது. 2024 மக்களவையில் காங்கிரஸ் தலைமையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதற்கான வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சர்வதேச நாடுகளும் ராகுலுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றன. இது பாஜவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இதுவரை மடுவான நினைத்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜ முன்பாக மலையாக தெரியத் தொடங்கி உள்ளன. இதன் தாக்கம் 2024 மக்களவை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிப் போய்விட்டதால் பாஜ தலைவர்கள் அனைவரும் இப்போது புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.