வாடகைத் தாய் மூலம் குழந்தை தகுதிச்சான்றிதழ் வழங்க வாரியம்: மாவட்டந்தோறும் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவோருக்கு தகுதிச்சான்றிதழ் வழங்க மாவட்டந்தோறும் வாரியம் அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. குழந்தையில்லா தம்பதியர், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்களுக்கு தகுதி உண்டு என மாவட்ட மருத்துவ வாரியத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மலட்டுத்தன்மை மறு உருவாக்க உதவிக்கான ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வாடகைத் தாய் ஒழுங்கு முறை சட்டம் ஆகியவை கடந்த 2021ல் ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டது. வணிகரீதியான வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

வாடகைத்தாய் ஒழுங்கு முறை சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த போதே ஒரு பிரபலம் குழந்தை பெற்றுள்ளார். வாடகைத்தாய் சட்டத்தின்படி குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவோரின் தகுதி மற்றும் சிகிச்சை முறை, பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இச்சட்டத்தின் கீழ் தேசிய வாடகைத்தாய் வாரியம் மற்றும் மாநில வாடகைத்தாய் வாரியத்தை 90 நாட்களில் அமைக்க வேண்டும். ஆனால், இந்த வாரியத்தின் கீழான மாவட்ட வாரியம் முறையாக செயல்படுகிறதா எனத் தெரியவில்லை. இச்சட்டப்படி மாவட்டந்தோறும் மாவட்ட மருத்துவ வாரியமும் இருக்க வேண்டும்.

இக்குழுவின் மூலம் தான் தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்க முடியும். மனுதாரர்கள் ஏற்கனவே குழந்தை இல்லாததால் நீண்ட போராட்டத்தை எதிர் கொண்டுள்ளனர். மிகுந்த வலியுடன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற விரும்புகின்றனர். எனவே, சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மலட்டுத்தன்மை மறுஉருவாக்க உதவிக்கான ஒழுங்குமுறை ஆணையம் வாரியம் இதுவரை அமைக்கப்படாவிட்டால் உடனடியாக அமைக்க வேண்டும். இதன் கீழ் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவ வாரியத்தை உருவாக்க வேண்டும்.

மாவட்ட மருத்துவ வாரியத்தில் உள்ள அதிகாரிகள், உறுப்பினர்கள் வாடகைத்தாய் சட்டத்தின் விதிகள், வழிகாட்டுதல்களை முறையாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்பங்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர் தொடர்பான பிரச்னைகள் குறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இதுதொடர்பாக மாநில நீதித்துறை பயிற்சியகத்தின் மூலம் மாஜிஸ்திரேட்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும். மனுதாரரின் மனுவை மாவட்ட மருத்துவ வாரியம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.