`விஜயபாஸ்கர் அடடடடா’ – துரைமுருகன் கலாய்… `உதயநிதி கிரியேட்டர்’ – எ.வ வேலு | சட்டப்பேரவை ஹைலைட்ஸ்

சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் காவிரி-குண்டாறு திட்டம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசியவர், “இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தது இன்றைய எதிர்க்கட்சி தலைவரும், அப்போதைய முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. ஆனால், திட்டம் மந்தமாகயிருப்பதாக தெரிகிறது. எனவே, அமைச்சரே, எங்களோடு வாருங்கள்! ஆறு வெட்டப்படுகிறதா பாருங்கள்! தாராளமாக நிதியைத் தாருங்கள்!” எனக் கேட்டு அமர்ந்தார்.

இதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ‘’நீண்ட நாள்களுக்கு பிறகு விஜயபாஸ்கரின் வேகமானப் பேச்சைக் கேட்டேன். ரொம்ப கெட்டிக்காரத்தனமாகப் பேசுவாரு. என்னமோ, அவர்கள் தான் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தது போல. வேறு யாரும் இது பற்றி சிந்திக்காதது போல. அடடடடடா….” என துரைமுருகன் அவருக்கேயான உடல்மொழியில் கூறியது அரங்கத்தில் உள்ளவர்களை சிரிக்க வைத்தது.

உடனே எடப்பாடி பழனிசாமி, “நாங்கள் எதுவும் செய்யவில்லையா..” என்பதாக மறுக்க. அதற்கு துரைமுருகனோ, “இல்ல சார். நீங்க செய்தீங்க அத நான் மறுக்கல. ஆனா…நீங்க மட்டும்  செய்ததாக சொன்னாரே. அதைச் சொல்கிறேன்” என அவரின் கிண்டல் தொனியில் பேசியதைக் கேட்டு விஜயபாஸ்கரும் அடக்க முடியாமல் சிரித்தார்.

துரைமுருகன்

பின்னர், மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார். அப்போது சென்னையில் நடத்தப்பட்ட 46-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து பேசினார். அவர், “உலகம் முழுவதும் உள்ள வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்வார்கள். பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டுக்கு எப்படி கூட்டம் சேர்க்க முடியும் என யோசித்தேன். இதில் நான், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இதை நடத்த வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது. ஒரு பொதுப்பணித்துறை அமைச்சராக எனக்கு போட்டியாளர்களைத் தங்க வைப்பது, பார்வையாளர் அரங்கம் அமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன.

இதில் அமைச்சர்கள் மெய்ய்நாதனும், மதிவேந்தனும் சீனியர் நீங்க தான் அண்ணா என சொல்லி விலகிடுவாங்க. ஆனால், பிரதமர் வேறு வருகிறார். எப்படி இதை நடத்த முடியும் என தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 10-15 முறை கூட்டம் நடத்தியிருப்போம். அதில் ’உதயா’ வும் ஒரு உறுப்பினர். நாங்கள் எல்லோரும் எதையாவது விவாதித்துக் கொண்டே இருப்போம். ஆனால், உதயநிதி வாயே திறக்கமாட்டாரு. நாங்கள் சொல்வதை எல்லாம் குறிப்பு எடுத்துக்கொள்வார். பின்பு, இறுதி நாளில் தான் ’வேகமாக ஓடும் குதிரைக்கு வேட்டி சட்டை அணிந்த’ படத்தைக் காண்பித்தார். அதுதான் இந்த நிகழ்ச்சிக்கான குறியீடாக அரசு பயன்படுத்தியது. ’பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்’ என்பதாக உதயநிதி என்னும் கிரியேட்டரால் இந்த நிகழ்ச்சி வெற்றிப்பெற்றது. அதில் நாங்களும் இணைந்து கொண்டோம். ’நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமரே முதலமைச்சரின் கைகளைப் பற்றி இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்ததே இல்லை’ எனப் பாராட்டினார்.

எ.வ. வேலு

இதற்கு பின்னால் உதயநிதி என்னும் கிரியேட்டர் இருக்கிறார். அதேபோல், இவர் ஆய்வுக் கூட்டம்  செல்வது, இன்னும் இதுபோன்ற செயல்பாடுகளைப் பார்க்கும்போது இவருக்குள் தலைமைப் பண்பு மறைந்திருக்கிறது என்பது தெரிகிறது” என உதயநிதியைப் புகழ்ந்து தள்ளினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.