2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியீடு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவதை இலக்காக கொண்டு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை   ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ல் வகுக்கப்பட்ட 5 ஆண்டு கொள்கை,  கடந்த ஆண்டு செப்டம்பரில், 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று வெளியிட்டார்.  இக்கொள்கை இன்று முதல் அமலுக்கு வருவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் ஜெனரல் சந்தோஷ் சாரங்கி தெரிவித்துள்ளார். கடந்த 2021-22ம் நிதியாண்டில் 676 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் மொத்த ஏற்றுமதி இந்த நிதியாண்டில் 760-777 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என சாரங்கி தெரிவித்தார்.

புதிய 5 ஆண்டு கொள்கையில், 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த ஏற்றுமதி  2 டிரில்லியன் அமெரிக்க டாலர் எட்டுவதை இலக்காக கொண்டுள்ளது. இது 5 ஆண்டுக்கான நிரந்தர கொள்கையாக இல்லாமல், நேரத்திற்கு ஏற்ப தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய ரூபாயை உலகளாவிய நாணயமாக மாற்ற  திட்டமிட்டுள்ளது. இதில் கூரியர் சேவை மூலம் ஏற்றுமதி செய்வதற்கான உச்ச வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 39 சிறப்பு ஏற்றுமதி நகரங்கள் பட்டியலில் கூடுதலாக பரிதாபாத், மொராதாபாத், மிர்சாபூர் மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வர்த்தக துறையை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்பதும் புதிய கொள்கையில் இடம் பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.