சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு வெளியான கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய்க்கு வில்லனாக ஆதிராவாக மாஸ் காட்டி இருந்தார் சஞ்சய் தத்.
இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார்.
சஞ்சய் தத்துக்கு காயம்: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீப காலமாக தென்னிந்திய மொழிப் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். விஜய்யின் லியோ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத் கன்னடத்தில் உருவாகி வரும் கேடி எனும் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குண்டு வெடிப்பு காட்சி: கன்னட திரையுலகில் தொடர்ந்து பான் இந்தியா படங்களாக எடுத்து வருகின்றனர். KD எனும் பான் இந்தியா படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வரும் நிலையில், குண்டு வெடிப்பு காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. அதில், கலந்து கொண்டு நடித்து வந்திருக்கிறார் சஞ்சய் தத்.
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் கண்ணாடி உடைந்ததில் அந்த கண்ணாடி துண்டுகள் தெறித்து நடிகர் சஞ்சய் தத்தின் முகம் மற்றும் முழங்கை உள்ளிட்ட இடங்களில் காயத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு நடிகர் சஞ்சய் தத்தை மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறுகின்றனர்.

லியோ படத்துக்கு சிக்கல் வருமா?: நடிகர் விஜய்யின் லியோ படத்திலும் சஞ்சய் தத் நடித்து வருகிறார். காஷ்மீர் போர்ஷனில் கலந்து கொண்ட சஞ்சய் தத் கேடி படத்தின் ஷூட்டிங் முடித்து விட்டு சென்னையில் லியோ படப்பிடிப்பில் பங்கேற்க உள்ள நிலையில், இப்படியொரு விபத்து ஏற்பட்டு இருப்பதால் லியோ படத்தின் சஞ்சய் தத் போர்ஷன் எடுக்க சில வாரங்கள் எடுக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்போதைக்கு அர்ஜுன் மற்றும் விஜய் போர்ஷன்கள் தான் படமாக்கப்பட்டு வருவதாகவும், அதனால் சஞ்சய் தத்துக்கு ஏற்பட்ட காயம் காரணமாக லியோ ஷூட்டிங்கிற்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என்கின்றனர். மேலும், லேசான காயம் ஏற்பட்டு இருப்பதால் ஓரிரு நாள் ஓய்வெடுத்து விட்டு விரைவில் கன்னட படத்தின் படப்பிடிப்பிலும் அவர் பங்கேற்பார் என்கின்றனர்.