பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் அறை, வாகனம், அவர் பயணித்த ஹெலிகாப்டர் ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இந்த சூழலில் கர்நாடக அரசியலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர கவனம்செலுத்தி வருகிறார். உடுப்பிக்கு அண்மையில் அவர் ஹெலிகாப்டரில் சென்றார். அந்த ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் இருந்ததாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டினார்.
அவர் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் பரிசோதிக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை அண்ணாமலை மறுத்தார். வினய் குமார் சொரகே அதிருப்தியில் பேசுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரை தற்போது முழுவதுமாக சோதனை செய்துள்ளனர். மேலும், அண்ணாமலையின் அறை, வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி சீதா, சோதனையில் விதிகளை மீறும் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை எனவும் தெரிவித்தார்.
newstm.in