
மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
மத்திய அரசு பணிகளில் சேர்வதற்கு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வானது இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது.
ஆனால், இனி தேர்வு தமிழ், தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பணிகளில் சமவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்றும், மொழி தடையால் ஒருவரது உரிமை பறிபோகக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கிராமப்புற இளைஞர்கள், தங்கள் தாய்மொழியில் தேர்வு எழுதி பலனடைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இனி தேர்வு குறித்த அறிவிப்பு வரும் பட்சத்தில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மத்திய ஆயுத படை தேர்வான, சிஏபிஎப் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in