
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குஜராத் பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பிறகு அங்கு பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது.
மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகனையும் கொடூரமாக கொன்றது. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது.

பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டு படுகொலை நிகழ்வுகளை ஒரு கொலை சம்பவத்துடன் ஒப்பிட கூடாது. அதற்கும் இதற்கும் அத்தனை வேறுபாடு இருக்கிறது.

தண்டனை காலத்தில் குற்றவாளிகளுக்கு சுமார் 3 ஆண்டுகள் பரோல் விடுப்பை அரசு வழங்கியுள்ளது. ஒரு குற்றவாளி 1500 நாட்கள் பரோலில் இருந்துள்ளார். என்ன மாதிரியான கொள்கையை பின்பற்றுகிறீர்கள்?.
இன்று பில்கிஸ் பானு, நாளை யார்? அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். என்ன அடிப்படையில் அவர்களை விடுவித்தனர் என்பதையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
அதனை நீங்கள் காட்டாவிட்டால் நாங்கள் முடிவெடுக்கவேண்டியிருக்கும் என்று காட்டமாக கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
newstm.in