“1000 கோடி, ஆஸ்கர், ஆர்ஆர்ஆர், வேள்பாரி,” பற்றிய கேள்விகளுக்கு மணிரத்னம் சொன்னது என்ன ?

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கடந்த எழுபது வருடங்களாகப் பலரும் திரைப்படமாக்க முயற்சித்து முடியாமல் போனது. ஆனால், இயக்குனர் மணிரத்னம் வெற்றிகரமாக அந்த நாவலை இரண்டு பாகப் படங்களாக எடுத்து முடித்தார்.

முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இரண்டாவது பாகம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு நேற்று மணிரத்னம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்ய லெட்சுமி, ஷோபிதா துலிபலா ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது மணிரத்னம் பல கேள்விகளுக்கு மிகவும் கலகலப்பாக பதில் சொன்னார். அவற்றிலிருந்து சில…

“பொன்னியின் செல்வன்” படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிறைய சரித்திரப் படங்கள் வரும் என நினைக்கிறேன். உங்களை மாதிரியே நானும் அம்மாதிரியான படங்களைப் பார்க்க விரும்புகிறேன்.

ஒரு படம் பண்ணணும்னு ஆசைப்படறதுக்குக் காரணம் படத்தோட கதை. பிரம்மாண்டம் பண்ணணும்னு படம் எடுக்க மாட்டேன். எந்தக் கதை அப்பீலிங்கா இருக்கோ அதைப் பண்ணணும். அடுத்த சரித்திரப் படங்கள், நிறைய இயக்குனர்கள் இருக்காங்க, அவங்ககிட்ட இருந்து வரணும். நான் இது மட்டும் பண்ணிட்டிருந்தேன்னா தேங்கிப் போயிடுவேன்.

1000 கோடி வசூல் கணக்கு நமக்கு எதுக்கு. எனக்குப் படம் எடுக்கணும்னு ஆசை, நீங்க படம் பார்க்கறீங்க, நீங்க நல்லா இருக்குன்னு சொன்னீங்கன்னா அது போதும் எனக்கு, அதுதான் முக்கியம். அதைத்தாண்டி என்ன நடக்குதோ அது சிறப்புதான்.

'வேள்பாரி' கதையை என்னோட நண்பர் ஷங்கர் எடுக்கப் போறாரு, நானும் அதை வெயிட் பண்ணி பார்க்கப் போறேன்.

ரசிகரா ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்தக் கருத்தை அவங்க எதுக்காகச் சொல்றாங்கன்றது அவங்களைப் பொறுத்தது. நம்ம தயாரிப்பு மேல நமக்கு நம்பிக்கை இருந்தால், எப்படி விருப்பப்பட்டமோ, எப்படி உண்மையா இருக்கணும்னு நினைச்சோமோ, போலித்தனமா இருக்கக் கூடாது, மிகைப்படுத்தி இருக்கக் கூடாது, இயற்கையா இருக்கணும், அந்த நோக்கத்தோட பண்ணும் போது, அதை பண்ணிட்டீங்கன்னா மத்தவங்க சொல்றதைப் பத்தி ஏன் கவலைப்படணும்.

ஒரு சரித்திரப் புனைவுப் படம் இது. ராஜராஜ சோழன் செய்தது பெரிய சாதனைகள், அதைப் பத்தி பெருமைப்படணும். கல்கி எழுதன கதையை வச்சி எடுக்கப்பட்ட படம். இதுல எதுக்கு மதத்தை எடுத்து வந்து நுழைக்கறீங்க. தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுத்தத் தேவையில்லை.

இரண்டாவது பாதியில் நின்னு நிதானமா பாட்டுப்பாடி நடனமாட நேரம் இருக்காது. கதைப் பின்னணியுடன் கூடிய பாடல்கள் மட்டும் இரண்டாம் பாகத்துல இருக்கும். ரகுமான் ரொம்ப சிறப்பா பண்ணியிருக்காரு.

இந்தப் படத்துல நடிச்ச பலர் கிட்ட இருந்து, ஒரு கதாபாத்திரத்துக்கு எப்படி லைப் கொடுக்கணும்கறத கத்துக்கிட்டேன். டைரக்டர் வேலை ஈஸி, நடிகர்கள் கிட்ட இது, அதுன்னு ஏதாவது சொல்லலாம். ஆனால், ஒரு கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்த வேண்டியது இவங்கதான். ஒரு சரித்திரப் படம், படிச்சது மட்டும்தான், கற்பனை உலகம். அங்க ஒரு இளவரசன் இருந்தால், உடல்மொழி மூலமா, நடிப்பு மூலமா அந்தக் கதாபாத்திரங்களை இவங்க உயிரோட கொண்டு வந்தாங்க.

“ஆர்ஆர்ஆர்' படம் ஆஸ்கர் போனது ரொம்ப பெருமையான விஷயம். போயிட்டு ஒரு அவார்டு வாங்கியதும் பெருமை. இந்தப் படத்தை ஆரம்பிக்கும் போது, ஆஸ்கருக்கு எடுத்துட்டு போகணும்கற நோக்கத்தோட நாங்க ஆரம்பிக்கல. உங்ககிட்ட கொண்டு வரணும். கல்கியோட இந்த நாவலை 70 வருஷமா அதிகமா விற்கப்பட்ட புக்கா இருந்திருக்கு. சினிமாவா சரியா கொண்டு வரணும்கறதுதான் நோக்கம். அதைத்தாண்டி நடந்தா மகிழ்ச்சிதான்.

இரண்டாவது பாகம் பார்த்துட்டு நீங்க வந்து பாராட்டு சொன்னீங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன்,” என பதிலளித்தார் மணிரத்னம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.