சென்னை : நடிகர் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. வெற்றிப் படங்களாகவும் அமைந்துள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான பத்து தல படமும் சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.
இந்தப் படங்களின் வெற்றியை தொடர்ந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன்னுடைய வீட்டில் சந்தித்து கலந்துரையாடினார்.
சிம்புவின் பிரியாணி விருந்து : நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளது. மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் வெளியான பத்து தல என ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளார் சிம்பு. சமீப காலங்களில் அவரது நடிப்பில் மட்டுமில்லாமல் செயல்பாடுகளிலும் முதிர்ச்சிக் காணப்படுகிறது. இனிமேல் தன்னுடைய ரசிகர்கள் பெருமைப்படும் வகையில் தன்னுடைய நடவடிக்கைகள் சிறப்பாக அமையும் என்று அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக கடந்த மாதத்தில் வெளியான சிம்புவின் பத்து தல படம் சிறப்பான விமர்சனங்களை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. முதல் முறையாக இந்தப் படத்தில் சிம்புவிற்கு ஜோடியில்லை, டூயட் இல்லை. ஆனால் தங்கை சென்டிமெண்ட்டுடன் வெளியான இந்தப் படம் மிகச்சிறப்பான வரவேற்பை ரசிகர்களைடையே பெற்றுத் தந்துள்ளது. மிகவும் அழுத்தமான இயல்பான கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடையே வித்தியாசமான சிம்புவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் சிம்பு சென்னையில் தன்னுடைய வீட்டில் வைத்து ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ரசிகர்களும் அதிகளவில் இருந்தனர். அவர்களுடன் சிம்பு அதிகமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சிம்பு, தன்னுடைய கைகளாலேயே பரிமாறி அசத்தினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

தன்னுடைய ரசிகர்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகளை அடிக்கடி சந்திக்கும் நடிகர் விஜய், அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்துவார். சமீபத்தில் வாரிசு படத்தின் ரிலீசுக்கு முன்னதாக பனையூரில், ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பிரியாணி, சிக்கன் 65 உள்ளிட்டவற்றுடன் விருந்து வைத்திருந்தார். இதேபோல தற்போது சிம்புவும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தாய்லாந்து சென்றுவந்த சிம்பு, தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக, நீண்ட தலைமுடியுடன் காணப்படுகிறார். அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியுடன் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தை கமல் தயாரிக்கவுள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்காக கதை தயார் செய்த தேசிங்கு பெரியசாமி அவரிடம் சொல்லி ஓகே வாங்கியதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்தக் படம் கைவிடப்பட்டுள்ளது.