ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; ஒருவர் காயமடைந்தார் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்.கர்னல் தேவேந்திர ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரச் சம்பவம் வியாழக்கிழமை மாலை 3.15 மணியளவில் நடந்துள்ளது. மலைப்பகுதியில் கனமழைப் பெய்து வரும் நிலையில், மெந்தர் துணைப் பிரிவு பகுதியில் உள்ள பாடா துரியன் நீர்வீழ்ச்சி அருகே மின்னல் தாக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான ராணுவ வாகனம் பிம்பர் காலியிலிருந்து பூஞ்ச் பகுதியிலுள்ள சங்கியோடிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து லெப்.கர்னல் கூறுகையில், “இன்று மாலை 3 மணியளவில் இந்திய ராணுவ வாகனம் ஒன்று பிம்பர் காலி பகுதியில் இருந்து சங்கியோட்டுக்கு சென்றுகொண்டிருந்த போது தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவத்தில் 5 இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் உயிரை இழந்தனர்; ஒருவர் காயமடைந்துள்ளார்” என்று தெரிவித்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்துததும் பூஞ்சிலிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள அந்தப் பகுதிக்கு 13 பிரிவு ராஷ்ட்ரிய ரைபில் படையின் தலைவர் விரைந்து சென்றுள்ளதாக தகவலறிந்தவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரேசி மாவட்டத்தின் கத்ரா பகுதியில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்கு உள்ளூர் தீவிரவாத குழுவான ஜம்மு காஷ்மீர் விடுதலை வீரர்கள் என்ற அமைப்பு பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த அமைப்பு அதன் சிறப்புப் படை ஒன்று சக்திவாய்ந்த எல்இடி வெடிகுண்டுமூலம் இதனை நிகழ்த்தியதாக தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.