சென்னை: Ajith – (அஜித்) அஜித்துடன் மூன்று முறை இணையும் சூழல் ஏற்பட்டது ஆனால் மிஸ் ஆகிவிட்டது என்று பிரபல இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருக்கிறார்.
முன்னணி நடிகரான அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வங்கிகள் மக்களிடம் கொள்ளையடிக்கும் விஷயத்தை கமர்ஷியலகாக சொல்லியிருந்தார் வினோத். இதனால் படம் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. மக்களும் கூட்டம் கூட்டமாக சென்று திரையரங்குகளில் படத்தை ரசித்தனர். இதன் காரணமாக படமானது 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது என அறிவிக்கப்பட்டது.
ஏகே 62: துணிவு படத்துக்கு பிறகு லைகா தயாரிப்பில் படம் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் அஜித். அது அவரது 62ஆவது படம் ஆகும். முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையில் இரண்டாம் பாகத்தை லைகா மாற்ற சொன்னதால் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். மகிழ் திருமேனியும் தனித்துவமான இயக்குநர் என்பதால் படம் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
அடுத்தது யாரோடு: ஏகே 62 அப்டேட் வெளிவராமல் இருக்கும் சூழலில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் இப்போதே கசிய ஆரம்பித்துள்ளன. அதன்படி அஜித்தின் 63ஆவது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் சிறுத்தை சிவா அப்படத்தை இயக்கவிருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படமும் கமர்ஷியல் ஜானரில்தான் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறுபட்ட ஜானர்: அஜித் இப்போது கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்தாலும் அவரது ஆரம்பகாலத்தில் பல சோதனை முயற்சிகளை செய்திருக்கிறார். அப்படி அவர் செய்த வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன் ஆகிய படங்கள் ஹிட்டும் ஆகியுள்ளன. அதேபோல் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் அஜித்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்கும் வந்த கருத்து வேறுபாடு காரணமாக அஜித் படத்திலிருந்து வெளியேறினார்.

செல்வராகவன் கூட்டணி: கமர்ஷியல் ரீதியாக படம் எடுக்கும் இயக்குநர்களுடன் இணையும் அஜித்; மாறுபட்ட ஜானரில் படம் எடுக்கும் இயக்குநர்களுடனும் இணைய வேண்டும் என அவரது ரசிகர்கள் நீண்டகாலமாகவே விரும்புகின்றனர். அப்படிப்பட்ட இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவனோடு அஜித் இணைந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் தங்களுக்குள் அவ்வப்போது பேசிக்கொள்வதும் உண்டு. இருப்பினும் அஜித்தும், செல்வராகவனும் இணைந்து பணியாற்றவில்லை.
எப்படிப்பட்ட படம் எடுப்பேன்? செல்வராகவன் விளக்கம்: இந்நிலையில் செல்வராகவன் அளித்த பேட்டி ஒன்றில், “அஜித்துடன் நான் மூன்று முறை இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் உருவானது. ஆனால் தேதிகள் பிரச்னை காரணமாக அவரை இயக்க முடியவில்லை. அஜித்தை வைத்து நான் படம் எடுத்தால் ஒரு அரசியல் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படம் எடுப்பேன்” என கூறினார்.