“அதிமுக ஆட்சிதான் உண்மையான ‘திராவிட மாடல்’ ஆட்சி” – ஜெயக்குமார்

சென்னை: “வேங்கைவயல் சம்பவத்தில் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கூட, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலை இருக்கிறது. இந்த விவகாரத்தில், ஆதிதிராவிட மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நிறைய இடங்களில் போதைப்பொருட்கள், குறிப்பாக கஞ்சா, பிரவுன் சுகர், மெத், ஹெராயின் உள்ளிட்டவை சர்வசாதாரணமாக கிடைக்கக்கூடிய ஒரு நிலை உள்ளதால், பலர் அவற்றைப் பயன்படுத்திவிட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்ற நிலை உள்ளது.

இதை முதல்வராக இருப்பவர், விழிப்புடன் இருந்து போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்களால் முதலில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் வியாபாரிகள்தான். கஞ்சா போதைக்கு அடிமையானவர்களின் தரும் தொல்லைகளால்,வியாபாரி ஒருவர் தனது கடையை இழுத்து மூடிவிட்டுச் சென்றதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

திமுக ஆட்சியில் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த முடியாமல், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வணிகர்கள் முதல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே போதைப்பொருட்கள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும். அது முதல்வர் ஸ்டாலினால் முடியவே முடியாது. அவர் நிர்வாகத் திறமையற்றவர், நிர்வாகம் செய்ய தகுதியற்றவர். நாட்டில் நடப்பது எதுவுமே தெரியாத ஒரு முதல்வர். சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்னர்” என்றார்.

அப்போது அவரிடம் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆளுநர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சில கருத்துகளை கூறியுள்ளார். திராவிடம் என்பது ஒரு நல்ல விஷயம். திராவிட மாடல் என்று கூறிக் கொண்டு திமுக செய்யும் அட்ராசிட்டிஸ் இருக்கிறதே, உண்மையில் அது ஒரு திராவக மாடல்தான்.

உண்மையில் திராவிட மாடலுக்கு உரிய ஆட்சி என்றால், அது அதிமுக ஆட்சிதான். வேங்கைவயல் சம்பவத்தில் இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கூட, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலை இருக்கிறது. இந்த விவகாரத்தில், ஆதிதிராவிட மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை. எனவே, சமத்துவமே இல்லாத ஒரு சூழலில், திராவிட மாடல் என்று சொல்வதற்கு இவர்களுக்கு தகுதி கிடையாது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.